இந்திய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்க பயணத்தில் மாற்றம்


இந்திய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்க பயணத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 21 Sep 2017 10:00 PM GMT (Updated: 21 Sep 2017 7:34 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்க பயணம் சில மாறுதல்களுடன் இறுதிசெய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போட்டி அட்டவணைப்படி இந்திய கிரிக்கெட் அணி ஆண்டின் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட வேண்டும். அங்கு பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் ‘பாக்சிங் டே’ அன்று அதாவது டிசம்பர் 26-ந்தேதி முதலாவது டெஸ்ட் போட்டியை தொடங்குவதற்கு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.

ஆனால் இலங்கை அணியின் இந்திய பயணம் டிசம்பர் 24-ந்தேதி தான் நிறைவு பெறுவதால், ‘பாக்சிங் டே’ டெஸ்டில் விளையாட இயலாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறிவிட்டது. அதே சமயம் ‘பாக்சிங் டே’ அன்று தென்ஆப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டியில் கட்டாயம் விளையாடியே தீரும் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உறுதிப்பட கூறியது. இதனால் போட்டி அட்டவணையை இறுதி செய்வதில் இழுபறி நிலை நீடித்தது.

இந்த நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. போட்டிகளின் எண்ணிக்கையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவில் விளையாட ஒப்புக் கொண்டுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்கும். மகாத்மா காந்தி- நெல்சன் மண்டேலா பெயரில் வெற்றி கோப்பை வழங்கப்படும்.

இந்திய அணி டிசம்பர் 28-ந்தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றடையும். அதன் பிறகு டிசம்பர் 30, 31-ந்தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும்.

மார்ச் 1-ந்தேதி தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அதற்கு ஏற்ற வகையில் இந்திய அணியின் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.

இதற்கிடையே, ஜிம்பாப்வே அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று ‘பாக்சிங்டே’ அன்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. 4 நாட்கள் கொண்ட பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக போர்ட் எலிசபெத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. “இது தான் முதல் பகல்-இரவு 4 நாள் டெஸ்ட் போட்டியாக இருக்கும். அடுத்த மாதம் ஐ.சி.சி. நிர்வாகிகளை சந்திக்கும் போது இந்த போட்டிக்கு ஐ.சி.சி. அங்கீகாரத்தை பெற முடியும் என்று நம்புகிறோம்” என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி ஹரூப் லார்கட் தெரிவித்தார்.

Next Story