“நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து விடுகிறோம்” ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் புலம்பல்


“நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து விடுகிறோம்” ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் புலம்பல்
x
தினத்தந்தி 22 Sep 2017 9:45 PM GMT (Updated: 22 Sep 2017 7:27 PM GMT)

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், தங்களது பேட்ஸ்மேன்கள் நெருக்கடியை திறம்பட சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து போய் விடுவதாக கூறியுள்ளார்.

கொல்கத்தா,

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், தங்களது பேட்ஸ்மேன்கள் நெருக்கடியை திறம்பட சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து போய் விடுவதாக கூறியுள்ளார்.

கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 252 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் விராட் கோலி (92 ரன்), ரஹானே (55 ரன்) அரைசதம் விளாசினர். தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு அடங்கிப்போனது. 2-வது தோல்வியை சந்தித்த பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாள் போட்டி மட்டுமல்ல, எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் நெருக்கடியான கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை மளமளவென இழந்து நிலைகுலைந்து விடும் போக்கு சமீபகாலமாக அடிக்கடி நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமாகும்.

ஆஸ்திரேலிய வீரர்கள் உண்மையிலேயே கடுமையான பயிற்சி மேற்கொள்கிறார்கள். அதை களத்திலும் காண்பிக்க வேண்டும். நெருக்கடியான சூழ்நிலை வரும்போது, பயந்து விடாமல் தங்களது திட்டமிடலை கனகச்சிதமாக செயல்படுத்த வேண்டும். இந்த ஆட்டத்தை பொறுத்தவரை நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் சில அற்பத்தனமான தவறுகளை செய்து விக்கெட்டுகளை தாரைவார்த்தனர். இந்தியா போன்ற சிறந்த அணிகளுக்கு எதிராக ஆடும் போது, இத்தகைய தவறுகளை செய்ய அனுமதிக்கக்கூடாது.

இந்திய பந்து வீச்சை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் அச்சத்திற்குள்ளாகிறார்களா? என்று கேட்கிறீர்கள். அந்த மாதிரி எல்லாம் இல்லை. ஆனால் கடந்த ஆட்டத்தில் கொஞ்சம் பயந்து விட்டார்கள் என்று நினைத்தேன். பந்து எந்த மாதிரி வருகிறது என்பதை மிகவும் கூர்ந்து கவனிக்க முயற்சிப்பதால், தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறந்து விடுகிறார்கள்.

மைதானத்திற்கு வெளியே அமர்ந்து கொண்டு, இத்தகைய சறுக்கல் எல்லாம் நிறுத்தப்பட வேண்டிய ஒன்று என்று சொல்வது எளிது. அணியின் தற்போதைய அணுகுமுறை கைகொடுக்கவில்லை என்றால் அதை மாற்ற வேண்டியது அவசியமாகும். எதுவாக இருந்தாலும் தோல்விக்கு குறிப்பிட்ட வீரர்களை குற்றம்சாட்டுவது கடினம். நெருக்கடியான நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை சரியாக முடிவு எடுத்து, அதற்கு தக்கப்படி விளையாட வேண்டும்.

இவ்வாறு சுமித் கூறினார்.

Next Story