தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா 3-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது


தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா 3-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 24 Sep 2017 12:00 AM GMT (Updated: 23 Sep 2017 7:16 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று 3-வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.

இந்தூர்,

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் முறையே இந்திய அணி 26 ரன், 50 ரன் வித்தியாசங்களில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒரு நாள் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டு ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கும் முன்னேற முடியும். முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, மனிஷ் பாண்டே ஆகியோரின் பேட்டிங் சரியில்லை. அவர்களும் பார்முக்கு திரும்பினால் அணி இன்னும் வலுப்பெறும்.

பேட்டிங்கை விட பந்து வீச்சு தான் இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது. கைமணிக்கட்டை அதிகமாக பயன்படுத்தி சுழற்பந்து வீசுவதில் கைதேர்ந்த குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் இருவரும் இந்த தொடரில் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கலங்கடித்துள்ளனர். குல்தீப் ஹாட்ரிக் சாதனையும் நிகழ்த்தி இருக்கிறார். இதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, ‘ஸ்விங்’ தாக்குதலில் மிரட்டுகிறார்கள். குறிப்பாக புவனேஷ்வர்குமார் ஓவருக்கு சராசரியாக 3.34 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சாதனை விளிம்பில் காத்திருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி மேற்கொண்டு 41 ரன்கள் எடுத்தால், கேப்டனாக 2 ஆயிரம் ரன்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சிறப்பை பெறுவார்.

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணிக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இதில் தோற்றால் தொடரையும் பறிகொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் முழுமூச்சுடன் வரிந்து கட்டுவார்கள். முந்தைய ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் தவறான ஷாட்டுகளை அடித்து விக்கெட்டுகளை தாரைவார்த்த ஆஸ்திரேலிய வீரர்கள் அத்தகைய பேட்டிங் சொதப்பலுக்கு பரிகாரம் தேட முயற்சிப்பார்கள்.

வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் முதல் இரு ஆட்டங்களில் ஓய்வு எடுத்த தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அவர் உடல்தகுதி பெற்று விட்டதை போன்றே தோன்றுகிறது. புதுமுக வீரர் ஹில்டன் கார்ட்ரைட் முதல் இரு ஆட்டங்களிலும் தலா ஒரு ரன்னில் வீழ்ந்த நிலையில், பிஞ்ச் அடியெடுத்து வைக்கும் போது ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை பலப்படும்.

அத்துடன் இந்தியாவின் சுழற்பந்து வீச்சு யுக்தியை சமாளிக்க கூடுதல் கவனமுடன் ஆடுவார்கள். வெளிநாட்டு மண்ணில் கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கும் ஆஸ்திரேலிய அணி, இந்த மோசமான பயணத்துக்கு முடிவு கட்டுவதற்கும் தீவிரம் காட்டும்.

இந்தூர் மைதானம் பொதுவாகவே பேட்டிங்குக்கு சொர்க்கமாகும். பிட்ச்சில் இருந்து எல்லைக்கோடு தூரம் குறைவானது என்பதால் எளிதில் ரன்மழை பொழிய முடியும்.

இது இந்தியாவுக்கு மிகவும் ராசியான மைதானமாகும். இங்கு இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களிலும் இந்தியாவே (இங்கிலாந்து (2), வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) வாகை சூடியுள்ளது.

2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்தது இங்கு ஒரு அணியின் அதிகபட்சமாகும். இதே ஆட்டத்தில் ஷேவாக் 219 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்தார்.
இந்த தடவையும் இது ரன் குவிப்புக்கே சாதகமாக இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் சமந்தர் சிங் சவுகான் ஏற்கனவே கூறியிருக்கிறார். அதனால் நடப்பு தொடரில் முதல் முறையாக 300 ரன்களுக்கு மேல் திரட்டப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மொத்தத்தில் இந்தியாவின் ஆதிக்கம் நீடிக்குமா? அல்லது சரிவில் இருந்து ஆஸ்திரேலியா மீண்டு பதிலடி கொடுக்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே அல்லது லோகேஷ் ராகுல், கேதர்ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் அல்லது பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், நாதன் கவுல்டர் நிலே, ஆஷ்டன் அகர் அல்லது ஆடம் ஜம்பா, பேட் கம்மின்ஸ், கனே ரிச்சர்ட்சன்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இன்றைய ஆட்டத்தின் போது மழையின் குறுக்கீடு இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

“ஷிகர் தவான் வருகை தந்த பிறகு எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதை பயன்படுத்தி அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதே நோக்கம். யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் இருவரும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களது பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறுவது நல்ல அறிகுறியாகும். இருவரும் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்து, அதே சமயம் ரன் விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்தினால், அது நல்ல விஷயமாகும்”
- இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரஹானே.

“இந்திய சுழற்பந்துவீச்சை கணித்து ஆடுவதில் தடுமாறுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரியும் போது நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. நல்ல தொடக்கம் கிடைத்து விட்டால், அதன் பிறகு இந்திய சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்கி விடலாம். ஆட்டத்தின் போக்கும் வேறு மாதிரி இருக்கும். தொடக்க வரிசையில் ஆக்ரோஷமாக ஆடக்கூடியவர், ஆரோன் பிஞ்ச். அவர் கடின பயிற்சியில் ஈடுபட்டதை பார்க்க நன்றாக இருந்தது. இந்த ஆட்டத்திற்கு உடல்தகுதியுடன் இருப்பார் என்று நம்புகிறோம்”
- ஆஸ்திரேலிய துணை கேப்டன் டேவிட் வார்னர்.

Next Story