இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Sep 2017 11:30 PM GMT (Updated: 25 Sep 2017 8:23 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன்,

கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (அக்டோபர்) 12–ந் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் அக்டோபர் 22–ந் தேதியும், 2–வது ஒருநாள் போட்டி புனேயில் 25–ந் தேதியும், 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் அக்டோபர் 29–ந் தேதியும் நடக்கிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் நவம்பர் 1–ந் தேதியும், 2–வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் 4–ந் தேதியும், 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் நவம்பர் 7–ந் தேதியும் நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கனே வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், காலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், டாம் லாதம், ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, ராஸ் டெய்லர் ஆகிய 9 வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படாத ஆல்–ரவுண்டர் ஜேன்ஸ் நீ‌ஷம், பேட்ஸ்மேன் நீல் புரூம் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

தற்போது நியூசிலாந்து ‘ஏ’ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணியின் இருந்து எஞ்சிய 6 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் அளித்த பேட்டியில், ‘நீ‌ஷம், புரூம் ஆகியோருக்கு எங்களது முடிவு ஏமாற்றம் அளிக்க தான் செய்யும். அவர்கள் தங்கள் ஆட்டத்தில் எல்லா துறையிலும் நிலையான முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். அவர்கள் இருவரும் தங்களது ஆட்டத்தில் ஏற்றம் கண்டால் உள்ளூர் கோடைகால சீசனில் அணிக்கு திரும்ப முடியும்’ என்று தெரிவித்தார்.


Next Story