ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 11 Oct 2017 11:30 PM GMT (Updated: 11 Oct 2017 10:05 PM GMT)

கவுகாத்தியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வீரர்கள் காயமின்றி தப்பினார்கள்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 118 ரன்களில் சுருட்டியது. இந்த இலக்கை எளிதில் எட்டிப்பிடித்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது.

கவுகாத்தி போட்டியில் வெற்றி பெற்றதும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் தனி பஸ் மூலம் தாங்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு திரும்பினார்கள். அப்போது வழியில் மர்ம நபர்கள் சிலர் திடீரென பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. அதிர்ஷ்டவசமாக வீரர்கள் அனைவரும் காயமின்றி தப்பினார்கள். இந்திய அணியின் தோல்வியை ஜீரணிக்க முடியாத ரசிகர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு பலத்த பாதுகாப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

பஸ் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் மூத்த பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் தனது டுவிட்டர் பக்கத்தில் சேதம் அடைந்த பஸ்சின் படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஓட்டலுக்கு திரும்புகையில் அச்சப்படும் வகையில் அணியினர் வந்த பஸ் மீது திடீரென கற்கள் வீசப்பட்டன’ என்று கூறியிருக்கிறார்.

இந்த சம்பவத்தால் வீரர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் கவனக்குறைவு ஏற்பட்டதா? என்ற சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இது குறித்து அசாம் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் பிரதிப் கூறுகையில் ‘முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுத்து இருந்தோம். ஆனால் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. அணியினர் தங்கிய ஓட்டல் அருகே சம்பவம் நடந்து உள்ளது. ஸ்டேடியம் அருகிலோ, மக்கள் கூட்டம் அதிகம் கொண்ட தெருவிலோ இது நடக்கவில்லை. இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்று உறுதி அளிக்கிறேன். ஆஸ்திரேலிய அணியினருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இந்த சம்பவத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆஸ்திரேலிய அணியினர் சென்ற பஸ் மீது நடந்த கல்வீச்சு சம்பவம் நமது கண்ணியத்தை குறைப்பதாகும். நாம் அனைவரும் இன்னும் அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பொறுப்புடன் செயல்படும் திறன் நம்மிடம் அதிகம் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டு இருக்கிறது. அதில், ‘பஸ் மீது வீசப்பட்ட கல், கிரிக்கெட் பந்தின் அளவுக்கு இருந்தது. கல் வீச்சில் தாக்குதலுக்கு உள்ளான ஜன்னல் அருகில் இருந்த இருக்கையில் அதிர்ஷ்டவசமாக யாரும் அமரவில்லை. இந்த சம்பவத்தில் வீரர்கள் காயம் அடையாவிட்டாலும் ஆஸ்திரேலிய அணியினர் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் கூறும் போது ‘கிரிக்கெட் அணியினருக்கு எதிரான தாக்குதல் உண்மையிலேயே எதிர்பாராத ஒன்றாகும். விளையாட்டு மையமாக வளர்ந்து வரும் கவுகாத்தியின் புகழை கெடுக்கும் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். அசாம் மக்கள் ஒருபோதும் இதுபோன்ற மோசமான நடத்தையில் ஈடுபடமாட்டார்கள். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்’ என்றார்.

மத்திய விளையாட்டுத் துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோர் தனது டுவிட்டர் பதிவில், ‘கவுகாத்தி சம்பவம் குறித்து அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவாலிடம் பேசினேன். நமது நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அணியின் தனிப்பட்ட பாதுகாப்பு நமக்கு மிகவும் முக்கியமானதாகும்’ என்று குறிப்பிட்டார்.

Next Story