இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி


இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி
x
தினத்தந்தி 17 Oct 2017 7:15 PM GMT (Updated: 17 Oct 2017 7:15 PM GMT)

இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-வது ஆட்டம் அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது.

அபுதாபி,

இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-வது ஆட்டம் அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 101 ரன்னும், ஷதாப்கான் ஆட்டம் இழக்காமல் 52 ரன்னும் எடுத்தனர். 7-வது சதம் கண்ட பாபர் அசாம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்த 5-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஒரு நாட்டில் தொடர்ந்து 5 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றார். இலங்கை அணி தரப்பில் காமகே 4 விக்கெட்டும், திசரா பெரேரா 2 விக்கெட்டும், லக்மல், வாண்டர்சே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி, பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48 ஓவர்களில் 187 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி கேப்டன் தரங்கா ஆட்டம் இழக்காமல் 112 ரன் எடுத்தாலும் அது அணியின் வெற்றிக்கு உதவாமல் வீணானது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷதாப்கான் 3 விக்கெட்டும், ஜூனைட்கான், ருமான் ராயீஸ், ஹசன் அலி, முகமது ஹபீஸ், சோகைப் மாலிக் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று நடக்கிறது.

Next Story