இந்திய கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் நியூசிலாந்து தோல்வி


இந்திய கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் நியூசிலாந்து தோல்வி
x
தினத்தந்தி 17 Oct 2017 9:45 PM GMT (Updated: 17 Oct 2017 7:17 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து தோல்வி அடைந்தது.

மும்பை,

மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 22-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.

அதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து அணி விளையாடுகிறது. இதன் முதலாவது பயிற்சி ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் 13 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணியில் டாப்-3 வீரர்கள் கலக்கினர். தொடக்க ஆட்டக்காரர்கள் 17 வயதான பிரித்வி ஷா (66 ரன், 80 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), தேசிய அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட லோகேஷ் ராகுல் (68 ரன், 75 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் அடித்தனர். கருண் நாயரும் 78 ரன்கள் (64 பந்து, 12 பவுண்டரி) விளாசினார். ஆனால் பின்வரிசையில் யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை. இதனால் ரன்வேகம் கொஞ்சம் சரிந்ததுடன் 300 ரன்களை தாண்ட முடியாமல் போய் விட்டது. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 17 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 15 ரன்களிலும் கேட்ச் ஆனார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணி 9 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் 9 பேர் பவுலிங் செய்தனர். இதில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. முடிவில் 47.4 ஓவர்களில் அந்த அணி 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய லெவன் அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டாம் லாதம் 59 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 47 ரன்களும், கிரான்ட்ஹோம் 33 ரன்களும், காலின்முன்ரோ, சான்ட்னெர் தலா 26 ரன்களும் எடுத்தனர். இந்திய லெவன் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 2-வது பயிற்சி ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Next Story