ஸ்ரீசாந்துக்கு, கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடை தொடரும் கேரள ஐகோர்ட்டு உத்தரவு


ஸ்ரீசாந்துக்கு, கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடை தொடரும் கேரள ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2017 10:00 PM GMT (Updated: 17 Oct 2017 7:19 PM GMT)

இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடை தொடரும் என்று கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவனந்தபுரம்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது சர்ச்சையில் சிக்கினார். 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டு குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது. இருப்பினும் அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்தது.

வாழ்நாள் தடையை நீக்ககோரி ஸ்ரீசாந்த், கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். அதை விசாரித்த கேரள ஐகோர்ட்டு நீதிபதி முகமது முஸ்டாக், ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் வாரியம் விதித்த வாழ்நாள் தடையை நீக்கி கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டார். இதனால் 34 வயதான ஸ்ரீசாந்த் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்குரிய சூழல் உருவானது. ரஞ்சி கிரிக்கெட்டில் அவரை சேர்ப்பதற்கு கேரள கிரிக்கெட் சங்கம் முனைப்பு காட்டியது.

ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் டிவிசன் பெஞ்ச் முன்பு அப்பீல் செய்தது. சூதாட்டத்தில் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஒழுங்கு நடவடிக்கை குழு அவருக்கு ஆயுட்கால தடை விதித்தது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் அப்பீலை விசாரித்த தலைமை நீதிபதி நவ்நிதி பிரசாத் சிங் தலைமையிலான டிவிசன் பெஞ்ச், ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடை தொடரும், இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளில் எதுவும் அவர் பங்கேற்க முடியாது என்று நேற்று உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் ஸ்ரீசாந்த் அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Next Story