லெவன் அணிக்கு எதிராக 2-வது பயிற்சி ஆட்டத்தில் மோதும் நியூசிலாந்து மும்பையில் இன்று நடக்கிறது


லெவன் அணிக்கு எதிராக 2-வது பயிற்சி ஆட்டத்தில் மோதும் நியூசிலாந்து மும்பையில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 18 Oct 2017 10:07 PM GMT (Updated: 18 Oct 2017 10:07 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி இன்று விளையாடுகிறது.

மும்பை,

கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 22-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதையொட்டி நியூசிலாந்து அணி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 30 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் நியூசிலாந்து- இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய லெவன் அணியில் முதலாவது ஆட்டத்தில் லோகேஷ் ராகுல், கருண் நாயர், பிரித்வி ஷா அரைசதம் அடித்து அசத்தினர். இன்றைய ஆட்டத்திலும் அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளனர்.

நியூசிலாந்து எப்படி?

அதே சமயம் இங்குள்ள சூழலுக்கு தக்கபடி தங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்வதில் கவனம் செலுத்தும் நியூசிலாந்து அணி, இன்றைய ஆட்டத்திலும் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் பரிசோதனை முயற்சியை தொடரும். முதலாவது ஆட்டத்தின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்டில் இந்த ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
நியூசிலாந்து: கனே வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், காலின் டி கிரான்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், ஆடம் மில்னே, காலின் முன்ரோ, கிளைன் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் ஒர்க்கர்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி: ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, ஷிவம் சவுத்ரி, கருண்நாயர், குர்கீரத் மான், மிலின்ட்குமார், ரிஷாப் பான்ட், ஷபாஸ் நதீம், கரண்ஷர்மா, தவால் குல்கர்னி, ஜெய்தேவ் உனட்கட், அவேஷ்கான்.
போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story