இலங்கைக்கு எதிரான3-வது ஆட்டத்திலும் பாகிஸ்தான் வெற்றி


இலங்கைக்கு எதிரான3-வது ஆட்டத்திலும் பாகிஸ்தான் வெற்றி
x
தினத்தந்தி 19 Oct 2017 10:00 PM GMT (Updated: 19 Oct 2017 8:36 PM GMT)

இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

அபுதாபி,

இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. புதுமுக பேட்ஸ்மேன் இமாம் உல்-ஹக் ‘செஞ்சுரி’ போட்டும், பந்து வீச்சாளர் ஹசன் அலி 5 விக்கெட்டுகள் சாய்த்தும் சாதனைகள் படைத்தனர்.

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 48.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் உபுல் தரங்கா (61 ரன்), திசரா பெரேரா (38 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 51 ஆக (24 ஆட்டம்) உயர்ந்தது. அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை 23 வயதான ஹசன் அலி (இதற்கு முன்பு வாக்கர் யூனிஸ் 27 ஆட்டங்களில் எட்டியிருந்தார்) படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராகவும் ஹசன் அலி (16 ஆட்டத்தில் 40 விக்கெட்) திகழ்கிறார்.

அடுத்து எளிய இலக்கை நோக்கி இறங்கிய பாகிஸ்தானுக்கு அறிமுக ஆட்டக்காரரான இமாம் உல்-ஹக் நேர்த்தியான தொடக்கத்தை தந்தார். 89 ரன்களில் இருந்த போது விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆகி பெவிலியன் நோக்கி திரும்பினார். ஆனால் சந்தேகம் அடைந்த நடுவர், ரீப்ளேயை சோதித்த போது டிக்வெல்லா தரையோடு சேர்த்து பந்தை பிடிப்பது தெரிந்ததால், இமாம் உல்-ஹக் மீண்டும் அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து பேட் செய்யும் அதிர்ஷ்டத்தை பெற்ற இமாம் உல்-ஹக் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அமர்க்களப்படுத்தினார். அறிமுக ஆட்டத்திலேயே சதம் விளாசிய 13-வது வீரராக சாதனையாளர்களின் பட்டியலில் இணைந்தார். அதே சமயம் பாகிஸ்தான் வீரர்களில் 2-வது நபர் ஆவார். ஏற்கனவே பாகிஸ்தானின் சலீம் இலாஹி 1995-ம் ஆண்டு இதே இலங்கைக்கு எதிராக தனது முதல் ஆட்டத்திலேயே சதம் கண்டிருந்தார்.

இமாம் உல்-ஹக் 100 ரன்களில் (125 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) திசராபெரேராவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பாகிஸ்தான் அணி 42.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. பாபர் அசாம் 30 ரன்களும், முகமது ஹபீஸ் 34 ரன்களும் எடுத்தனர். ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி தொடர்ச்சியாக சந்தித்த 10-வது தோல்வி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4-வது ஒரு நாள் போட்டி சார்ஜாவில் இன்று (இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடக்கம்) நடக்கிறது.

Next Story