இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் மும்பையில் இன்று நடக்கிறது


இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் மும்பையில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 21 Oct 2017 10:30 PM GMT (Updated: 21 Oct 2017 8:36 PM GMT)

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் நடக்கிறது.

மும்பை,

கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளை யாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டு 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் இந்திய அணி இந்த போட்டியில் களம் இறங்கும்.

கேப்டன் விராட்கோலி, ரோகித் சர்மா, ரஹானே, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலம் சேர்க்கும். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி பேட்டிங்கில் ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்தில், கேப்டன் கனே வில்லியம்சன் டாம் லாதம் ஆகியோரை அதிகம் நம்பி இருக்கிறது. வேகப்பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சுழற்பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னெர், சோதி ஆகியோர் சிறந்த நிலையில் உள்ளனர்.

நியூசிலாந்து அணியிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருப்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி கடைசியாக ஆடிய (2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) ஒருநாள் போட்டியில் 214 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த கசப்பான நினைவை மாற்ற இந்திய அணி முயற்சிக்கும்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 மற்றும் தூர்தர்ஷன் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரஹானே, மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர்.

நியூசிலாந்து: கனே வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், காலின் டி கிரான்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், ஆடம் மில்னே, காலின் முன்ரோ, கிளைன் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் ஒர்க்கர், சோதி.

Next Story