இந்திய அணி மோசமான தொடக்கம் இலங்கை பவுலர் லக்மல் அசத்தல்


இந்திய அணி மோசமான தொடக்கம் இலங்கை பவுலர் லக்மல் அசத்தல்
x
தினத்தந்தி 16 Nov 2017 11:30 PM GMT (Updated: 16 Nov 2017 8:29 PM GMT)

மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட்: இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 17 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்கிறது.

கொல்கத்தா,

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. எதிர்பார்த்தது போலவே ‘வருணபகவான்’ புகுந்து விளையாடியதால் ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மழை மற்றும் ஈரப்பதமான மைதானம் காரணமாக 3½ மணி நேரம் பாதிப்புக்கு பிறகு பிற்பகலில் தான் ‘டாஸ்’ போடப்பட்டது. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால், மேகமூட்டமான வானிலையை கருத்தில் கொண்டு தயக்கமின்றி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டதால், முரளி விஜய்க்கு இடம் கிடைக்கவில்லை. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோருடன் 5-வது பவுலராக புவனேஷ்வர்குமார் கைகோர்த்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் களம் புகுந்தனர். புற்கள் நிறைந்த இந்த ஆடுகளத்தில் ஈரப்பதமும் இருந்ததால் வேகப்பந்து வீச்சு தாறுமாறாக எடுபட்டது. ஸ்விங் ஆனதுடன் களத்தில் பந்து நன்கு எழும்பவும் (பவுன்ஸ்) செய்தது. இதை இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் கச்சிதமாக பயன்படுத்தி தொடுத்த தாக்குதலில் இந்திய வீரர்கள் மிரண்டு போனார்கள்.

சுரங்கா லக்மல் வீசிய முதல் பந்திலேயே லோகேஷ் ராகுல் (0) விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆகிப்போனார். அடுத்து புஜாரா ஆட வந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானும் (8 ரன்) நிலைக்கவில்லை. லக்மல் வீசிய பந்தை எதிர்கொண்ட போது பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பையும் பதம் பார்த்தது. 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி நுழைந்தார்.

8.2 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்திருந்த போது மறுபடியும் மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்ததும் இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட் செய்த போது, லக்மல் மேலும் ஒரு ‘செக்’ வைத்தார். ரன் கணக்கை தொடங்காத கேப்டன் விராட் கோலி அவரது பந்து வீச்சில் எல்.பி. டபிள்யூ. ஆனார். இதையடுத்து டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தார். ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்பை லேசாக தாக்குவது தெரிய வந்ததால், அவுட் உறுதி செய்யப்பட்டது.

மோசமான தொடக்கம் கண்ட இந்திய அணி முதல் இன்னிங்சில் 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 17 ரன்களுடன் ஊசலாடிக்கொண்டிருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது மழையும் பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. புஜாரா (8 ரன், 43 பந்து), ரஹானே (0) களத்தில் இருக்கிறார்கள்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் 6 ஓவர்கள் பந்து வீசியும் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை. 6 ஓவர்களையும் மெய்டனாக்கிய அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அட்டகாசப்படுத்தினார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் அரைமணி நேரத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு தொடங்கும். ஆனால் இன்றும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஸ்கோர் போர்டு - இந்தியா
முதல் இன்னிங்ஸ்
ராகுல்(சி)டிக்வெல்லா(பி)லக்மல் 0
தவான் (பி) லக்மல் 8
புஜாரா (நாட்-அவுட்) 8
கோலி எல்.பி.டபிள்யூ(பி)லக்மல் 0
ரஹானே (நாட்-அவுட்) 0
எக்ஸ்டிரா 1
மொத்தம் (11.5 ஓவர்களில்
3 விக்கெட்டுக்கு) 17

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-13, 3-17

பந்து வீச்சு விவரம்
லக்மல் 6-6-0-3
லாஹிரு காமகே 5.5-1-16-0

* இந்திய தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் இந்த டெஸ்டுக்கு முன்பாக தொடர்ந்து 7 டெஸ்டுகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்திருந்தார். ஆனால் நேற்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில், ஆட்டத்தின் முதல் பந்திலேயே லக்மலின் பந்து வீச்சில் வீழ்ந்தார். அவரது பேட்டில் நூலிழை அளவுக்கு உரசிய பந்து விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது.

போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டம் இழப்பதை ‘கோல்டன் டக்’ என்று வர்ணிப்பார்கள். 140 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு முதல் பந்திலேயே ஒரு வீரர் விக்கெட்டை பறிகொடுப்பது இது 31-வது நிகழ்வாகும். இந்திய தரப்பில் சுனில் கவாஸ்கர் (3 முறை), சுதிர் நாயக், டபிள்யூ.வி.ராமன், ஷிவ் சுந்தர் தாஸ், வாசிம் ஜாபர் ஆகியோருக்கு பிறகு இந்த வகையில் ஆட்டம் இழந்த இந்தியர் லோகேஷ் ராகுல் தான்.

* இந்திய கேப்டன் விராட் கோலி இந்த இன்னிங்சில் 11 பந்துகளை சந்தித்து ரன் ஏதுமின்றி வெளியேறினார். மோசமான சராசரியை அவர் பெற்றிருக்கும் மைதானம் இது தான். இங்கு 4-வது டெஸ்டில் ஆடும் அவர் இதுவரை 83 ரன்கள் (சராசரி 13.83) மட்டுமே எடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை தொடர் முடிந்ததும் உடனடியாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை. எனவே அந்த தொடருக்கு தயாராவதற்காகவே கொல்கத்தா ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இது போன்ற ஆடுகளங்களில் (பிட்ச்) விளையாடுவது மகிழ்ச்சி தான்.

உண்மையிலேயே எளிதான சூழலில் ஆடுவதை நாங்கள் விரும்புவதில்லை. பெரும்பாலான வீரர்கள் இத்தகைய சவாலை சந்திப்பதில் ஆர்வமுடன் இருக்கிறார்கள். ஒரு அணியாக தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறோம். ஆனால் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் பேட்ஸ்மேன்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. இரு அணிகளும் ஏற்றுக்கொண்டதால் மின்னொளி பயன்படுத்தப்பட்டது. ஆனால் இத்தகைய சூழலில் சிவப்பு நிற பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமாகும்’ என்றார்.

Next Story