இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு


இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2017 11:45 PM GMT (Updated: 17 Nov 2017 7:43 PM GMT)

இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து போராடுகிறது. 2-வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது.

கொல்கத்தா,

இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதியை மழை ஆக்கிரமித்து கொண்டது. வெறும் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட தொடக்க நாளில் இந்திய அணி லோகேஷ் ராகுல் (0), ஷிகர் தவான் (8 ரன்), கேப்டன் விராட் கோலி (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 17 ரன்களுடன் பரிதவித்தது. புஜாரா (8 ரன்), அஜிங்யா ரஹானே (0) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். மேகமூட்டமான சூழல் நிலவியதால் நேற்றும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. முந்தைய நாள் 3 விக்கெட்டுகளை சாய்த்ததுடன் 6 ஓவர்களை மெய்டனாக்கி மிரட்டிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல், தொடக்கத்தில் மேலும் ஒரு ஓவரை மெய்டனாக்கினார். அவரது பந்து வீச்சில் ரன் கணக்கை தொடங்குவது யார்? என்ற கேள்விக்கு ஒரு வழியாக ரஹானே விடைகொடுத்தார். அவரது ஓவரில் பந்தை ரஹானே பவுண்டரிக்கு ஓட விட்டார். தொடர்ச்சியாக 46 பந்துகளில் லக்மல் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை. இந்த வகையில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு சிறந்த செயல்பாடாக இது அமைந்தது.

பவுண்டரி அடித்த சிறிது நேரத்தில் ரஹானே (4 ரன், 21 பந்து) நடையை கட்டினார். வேகப்பந்து வீச்சாளர் தசுன் ஷனகா ஆப்-சைடுக்கு வெளியே வீசிய பந்தை தேவையில்லாமல் அடித்து விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் ரஹானே கேட்ச் ஆனார். அடுத்து வந்த அஸ்வினும் (4 ரன், 29 பந்து) அதே ஷனகாவின் பந்து வீச்சுக்கு இரையானார். அப்போது இந்திய அணி 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு இன்னிங்சில் 50 மற்றும் அதற்கு குறைவான ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்ப்பது 2010-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் நிகழ்வாகும்.

ஆனால் மறுமுனையில் புஜாரா, அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். ஆப்-சைடுக்கு வெளியே எழும்பி சென்ற பந்துகளை தொடுவதை தவிர்த்த புஜாரா, ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிகளாக மாற்றினார். வேகத்துக்கு சாதகமான ஆடுகளம், கடினமான சீதோஷ்ண நிலை இவற்றை திறம்பட சமாளித்து, அவர் வெளிப்படுத்திய சாதுர்யமான ஆட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்திய அணி 32.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதனால் அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை கொட்டியதால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியாமல் போய் விட்டது. புஜாரா 47 ரன்களுடனும் (102 பந்து, 9 பவுண்டரி), விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 6 ரன்னுடனும் (22 பந்து) களத்தில் நிற்கிறார்கள்.

இரண்டாம் நாளில் வெறும் 21 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இரு நாட்களையும் சேர்த்து மொத்தம் 147 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளன. 3-வது நாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறும்.

இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மல், பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்ததை பார்க்க முடிந்தது. இதே போல் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ‘ஸ்விங்’ செய்வதில் கில்லாடியான புவனேஷ்வர்குமார் ஆகியோரும் இங்கு தாக்குதல் தொடுத்து பதிலடி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். எஞ்சிய மூன்று நாட்கள் போட்டி முழுமையாக நடந்தால் 270 ஓவர்கள் பந்து வீச முடியும். அவ்வாறு வீசப்பட்டால் இந்த டெஸ்டில் நிச்சயம் முடிவு கிடைக்கும். மழை குறுக்கீடு இல்லாவிட்டால் உண்மையிலேயே இங்குள்ள சூழலுக்கு இந்த டெஸ்ட் சுவாரஸ்யமாக இருக்கும்’ என்றார்.

Next Story