இந்திய அணி 172 ரன்னில் ஆல்–அவுட்


இந்திய அணி 172 ரன்னில் ஆல்–அவுட்
x
தினத்தந்தி 19 Nov 2017 12:00 AM GMT (Updated: 18 Nov 2017 7:48 PM GMT)

கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 172 ரன்னில் ஆல்–அவுட் ஆனது.

கொல்கத்தா,

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல் இரு நாட்களில் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலைக்கு மத்தியில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 2–வது நாள் முடிவில் 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (47 ரன்), விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (6 ரன்) களத்தில் நின்றனர்.

இந்த நிலையில் 3–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். பவுண்டரி அடித்து தனது 16–வது அரைசதத்தை கடந்த புஜாரா, அதன் பிறகு நீடிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு காமகே வீசிய பந்து, அவரை ஏமாற்றிக்கொண்டு ஆப்–ஸ்டம்பை தூக்கியது. புஜாரா 52 ரன்களுடன் (117 பந்து, 10 பவுண்டரி) நடையை கட்டினார்.

இதன் பின்னர் சஹாவுடன், ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கைகோர்த்து ஸ்கோரை 100 ரன்களை கடக்க வைத்தார். ஸ்கோர் 127 ரன்களை எட்டிய போது ஜடேஜா (22 ரன், 37 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு இலங்கை வீரர்கள் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றனர். அதே ஓவரில் சஹாவும் (29 ரன், 83 பந்து, 6 பவுண்டரி) வீழ்ந்தார். அப்போது இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 128 ரன்களுடன் பரிதவித்தது.

அதிர்ஷ்டவசமாக பின்வரிசை வீரர்கள் அளித்த கணிசமான பங்களிப்பால் இந்திய அணி கொஞ்சம் கவுரவமான நிலைக்கு நகர்ந்தது. இறுதி கட்டத்தில் சில பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய முகமது ‌ஷமி 24 ரன்கள் (22 பந்து, 3 பவுண்டரி) எடுத்தார்.

முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 59.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 200 ரன்களுக்குள் அடங்குவது இது 2–வது முறையாகும். ஏற்கனவே 2005–ம் ஆண்டு சென்னையில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 167 ரன்னில் சுருண்டு இருந்தது. இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகளும், காமகே, ‌ஷனகா, தில்ருவான் பெரேரா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சமரவிக்ரமா (23 ரன்), கருணாரத்னே (8 ரன்) ஆகியோரை ‘ஸ்விங்’ பவுலர் புவனேஷ்வர்குமார் காலி செய்து நம்பிக்கையை உருவாக்கினார்.

ஆனால் 3–வது விக்கெட்டுக்கு துணை கேப்டன் திரிமன்னேவும், முன்னாள் கேப்டன் மேத்யூசும் ஜோடி சேர்ந்து தங்கள் அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். பந்து பவுன்ஸ் ஆன போதிலும், ஈரப்பதம் காய்ந்து விட்டதால் அடித்து நொறுக்குவதற்கும் ஆடுகளம் (பிட்ச்) ஏதுவாக மாறியது. திரிமன்னே 27 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ஷிகர் தவான் வீணடித்தார். அதன் பிறகு திரிமன்னேவை (51 ரன், 94 பந்து, 8 பவுண்டரி) அரைசதத்திற்கு பிறகே வெளியேற்ற முடிந்தது. இதே போல் நெருக்கடியான சூழலில் அணியின் ஸ்கோரை வலுப்படுத்திய மேத்யூஸ் 52 ரன்களில் (94 பந்து, 8 பவுண்டரி) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 45.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்து இருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் அத்துடன் 3–வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேப்டன் தினேஷ் சன்டிமால் 13 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் நிரோ‌ஷன் டிக்வெல்லா 14 ரன்களுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

தற்போதைய நிலையில் இந்த டெஸ்டில் இலங்கை அணியின் கையே சற்று ஓங்கி இருக்கிறது. நேற்றைய தினம் மொத்தம் 72.2 ஓவர்கள் பந்து வீசப்பட்டன. 4–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா

லோகேஷ் ராகுல் (சி) டிக்வெல்லா (பி) லக்மல் 0

தவான் (பி) லக்மல் 8

புஜாரா (பி) காமகே 52

கோலி எல்.பி.டபிள்யூ (பி) லக்மல் 0

ரஹானே (சி) டிக்வெல்லா (பி) ‌ஷனகா 4

அஸ்வின் (சி) கருணாரத்னே (பி) ‌ஷனகா 4

சஹா (சி) மேத்யூஸ் (பி) பெரேரா 29

ஜடேஜா எல்.பி.டபிள்யூ (பி) பெரேரா 22

புவனேஷ்வர்குமார் (சி) டிக்வெல்லா (பி) லக்மல் 13

முகமது ‌ஷமி (சி) ‌ஷனகா (பி) காமகே 24

உமேஷ் யாதவ் (நாட்–அவுட்) 6

எக்ஸ்டிரா 10

மொத்தம் (59.3 ஓவர்களில் ஆல்–அவுட்) 172

விக்கெட் வீழ்ச்சி: 1–0, 2–13, 3–17, 4–30, 5–50, 6–79, 7–127, 8–128, 9–146

பந்து வீச்சு விவரம்

லக்மல் 19–12–26–4

லாஹிரு காமகே 17.3–5–59–2

‌ஷனகா 12–4–36–2

கருணாரத்னே 2–0–17–0

ஹெராத் 2–0–5–0

தில்ருவான் பெரேரா 7–1–19–2

இலங்கை

சமரவிக்ரமா (சி) சஹா (பி) புவனேஷ்வர் 23

கருணாரத்னே எல்.பி.டபிள்யூ (பி) புவனேஷ்வர் 8

திரிமன்னே (சி) கோலி (பி) உமேஷ் 51

மேத்யூஸ் (சி) ராகுல் (பி) உமேஷ் 52

சன்டிமால் (நாட்–அவுட்) 13

டிக்வெல்லா (நாட்–அவுட்) 14

எக்ஸ்டிரா 4

மொத்தம் (45.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 165

விக்கெட் வீழ்ச்சி: 1–29, 2–34, 3–133, 4–138

பந்து வீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 14.4–2–49–2

முகமது ‌ஷமி 13.5–5–53–0

உமேஷ் யாதவ் 13–1–50–2

அஸ்வின் 4–0–9–0

கோலி 0.1–0–0–0

‘‘சவாலான ஆடுகளங்களில் விளையாடுவது எனக்கு எப்போதும் பிடிக்கும். அத்தகைய ஆடுகளங்கள் தான் எனது ஆட்ட நுணுக்கங்களுக்கும், மனஉறுதிக்கும் பொருத்தமானவை. மேலும் போராட்ட குணம் வெளிப்பட்டு, நம்பிக்கை அதிகரிக்கும். அணியையும் சிக்கலான நிலையில் இருந்து மீட்க முடியும். கடினமான ஆடுகளங்களில், எனக்கு நானே ஊக்கப்படுத்திக் கொண்டு முடிந்த வரை நீண்ட நேரம் விளையாட முயற்சிக்கிறேன்.

இந்த டெஸ்டில் 4–வது நாளில் தொடக்க ஆட்டம் மிகவும் முக்கியமானது. நமது பவுலர்கள் புத்துணர்ச்சியுடன் தாக்குதலை தொடுப்பார்கள் என்று நம்புகிறேன். சில விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்தி விட்டால் அவர்களை கட்டுப்படுத்திவிட முடியும்’’– இந்திய வீரர் புஜாரா.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி, தனது 14–வது ஓவரை வீசிக்கொண்டிருந்த போது வலது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் களத்தை விட்டு வெளியேறினார். இதனால் அந்த ஓவரின் கடைசி பந்தை கேப்டன் விராட் கோலி வீசினார். ஆனால் அவரது காயம், பயப்படும்படி இல்லை. நாளைய தினம் (இன்று) பந்து வீசுவார் என்று புஜாரா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

‘‘கடந்த சில ஆண்டுகளில், இந்திய அணி சில அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி இருக்கிறது. புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களாக விளங்குகிறார்கள். அவர்களை சமாளிக்க திறமையுடன் மனரீதியாக தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும். அவர்களது பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது கொஞ்சம் கூட ரிலாக்சாக இருக்க முடியாது’’ – இலங்கை வீரர் மேத்யூஸ்.


Next Story