மத்தியபிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி முன்னிலை


மத்தியபிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி முன்னிலை
x
தினத்தந்தி 19 Nov 2017 8:50 PM GMT (Updated: 19 Nov 2017 8:50 PM GMT)

தமிழகம் – மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டி (சி பிரிவு) இந்தூரில் நடந்து வருகிறது.

இந்தூர்,

தமிழகம் – மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டி (சி பிரிவு) இந்தூரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் 264 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 2–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. ஜெகதீசன் 94 ரன்களுடனும், ஆல்–ரவுண்டர் யோ மகேஷ் 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3–வது நாளான நேற்று ஜெகதீசன் (101 ரன்) சதம் அடித்த உடனே கிளீன் போல்டு ஆகிவிட்டார். பின்னர் 8–வது விக்கெட்டுக்கு இறங்கிய முகமதுவின் (43 ரன்) துணையுடன் அணிக்கு முன்னிலையை ஏற்படுத்தி தந்த யோ மகேஷ் செஞ்சுரியும் போட்டார். முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. யோ மகேஷ் 103 ரன்களுடன் (214 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்) கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

அடுத்து 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி நேற்றைய ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆட்டம் டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளது.



Next Story