டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் பேட்டிங் செய்த புஜாரா


டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் பேட்டிங் செய்த புஜாரா
x
தினத்தந்தி 20 Nov 2017 11:45 PM GMT (Updated: 20 Nov 2017 6:42 PM GMT)

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா 5 நாட்களும் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது. நேற்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 

4–வது நாள் ஆட்டம் முடிவில் 2–வது இன்னிங்சில் 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்த புஜாரா கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடி 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போது முதல் இன்னிங்சில் 8 ரன்கள் எடுத்து இருந்த புஜாரா, 2–வது நாளில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது 47 ரன்னுடன் களத்தில் இருந்தார். 3–வது நாளில் தொடர்ந்து ஆடிய அவர் 52 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

3–வது இந்திய வீரர்

இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் பேட்டிங் செய்த 3–வது இந்திய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். உலக அளவில் இத்தகைய சாதனை படைத்தவர்கள் பட்டியலில் அவர் 9–வது இடத்தையும் பெற்றுள்ளார். இந்திய வீரர்கள் 3 பேரும் 5 நாட்கள் பேட்டிங் செய்தது கொல்கத்தாவில் என்பது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் பேட்டிங் செய்வது என்பது அரிய நிகழ்வாகும். இதற்கு முன்பு 1960–ம் ஆண்டில் இந்திய வீரர் ஜெய்சிம்ஹா(ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தா), 1977–ம் ஆண்டில் இங்கிலாந்து வீரர் ஜெப்ரி பாய்காட்(ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாட்டிங்காம்), 1980–ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் கிம் கியூக்ஸ் (இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ்), 1984–ம் ஆண்டில் இங்கிலாந்து வீரர் ஆலன் லாம்ப்(வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக லார்ட்ஸ்), 1984–ம் ஆண்டில் இந்திய வீரர் ரவிசாஸ்திரி (இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தா), 1999–ம் ஆண்டில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் அட்ரியன் கிரிப்ட் (நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டன்), 2006–ம் ஆண்டில் இங்கிலாந்து வீரர் பிளின்டாப் (இந்தியாவுக்கு எதிராக மொகாலி), 2012–ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்க வீரர் அல்விரோ பீட்டர்சன் (நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டன்) ஆகியோர் டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும்  பேட்டிங் செய்த பெருமைக்குரியவர்கள் ஆவர்.

Next Story