அம்லாவின் சாதனையை சமன் செய்தார், விராட்கோலி


அம்லாவின் சாதனையை சமன் செய்தார், விராட்கோலி
x
தினத்தந்தி 21 Nov 2017 12:15 AM GMT (Updated: 20 Nov 2017 6:49 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வேகமாக 50 சதங்கள் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் அம்லாவின் சாதனையை விராட்கோலி சமன் செய்தார்.

* சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (20 ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட்) நேற்று விராட்கோலி 50–வது சதத்தை பதிவு செய்தார். இந்த வகையில் உலக அளவில் அதிக சதம் கண்ட வீரர்கள் வரிசையில் விராட்கோலி 8–வது இடத்தையும், இந்திய அளவில் 2–வது இடத்தையும் பிடித்தார். விராட்கோலி தனது 348–வது இன்னிங்சில் 50–வது சதத்தை எட்டி இருக்கிறார். இதன் மூலம் வேகமாக 50 சதங்கள் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் அம்லாவின் சாதனையை சமன் செய்தார். இந்திய ஜாம்பவான் தெண்டுல்கர் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் (100 சதங்கள்) உள்ளார். 

* இந்த ஆண்டில் விராட்கோலி அடித்த 9–வது சதம் (டெஸ்டில் 3, ஒருநாள் போட்டியில் 6) இதுவாகும். இதற்கு முன்பு ஒரே ஆண்டில் அவர் 2 முறை (2012, 2014) 8 சதங்கள் அடித்து இருக்கிறார். ஒரு ஆண்டில் அதிகபட்சமாக ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா), கிரேமி சுமித் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் 9 சதங்கள் அடித்ததே சாதனையாக இருக்கிறது. அந்த சாதனையை கடக்க விராட்கோலிக்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவை. 

* கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி அடித்த 11–வது சதம் இதுவாகும். இதன் மூலம் இந்திய அணியின் கேப்டனாக இருக்கையில் அதிக சதம் அடித்த கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார். 

* இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் டக்–அவுட் (0) ஆன விராட்கோலி 2–வது இன்னிங்சில் சதம் அடித்தார். ஒரு டெஸ்டில் டக் அவுட் மற்றும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் விராட்கோலி ஆவார். இந்த வகையில் ஒட்டுமொத்தத்தில் 18–வது கேப்டனாக இணைந்துள்ளார். 

* விராட்கோலி 119 பந்துகளில் சதத்தை எட்டினார். டெஸ்ட் போட்டியில் அவர் விரைவாக அடித்த சதம் இதுவாகும். இதற்கு முன்பு 2014–ம் ஆண்டில் வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 129 பந்துகளில் சதம் கண்டு இருந்ததே விரைவான சதமாக இருந்தது.

Next Story