இந்தியா–இலங்கை அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது


இந்தியா–இலங்கை அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது
x
தினத்தந்தி 21 Nov 2017 12:30 AM GMT (Updated: 20 Nov 2017 6:54 PM GMT)

இந்தியா–இலங்கை இடையே கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கேப்டன் விராட்கோலி சதம் அடித்தார்.

கொல்கத்தா, 

இந்திய –இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்னில் சுருண்டது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 294 ரன்கள் எடுத்து ‘ஆல்–அவுட்’ ஆனது. இதைத்தொடர்ந்து 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 4–வது நாளில் 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் அன்றைய ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. ஷிகர் தவான் 94 ரன்னில் அவுட் ஆனார். லோகேஷ் ராகுல் 73 ரன்களுடனும், புஜாரா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

விராட்கோலி சதம்

நேற்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. லோகேஷ் ராகுல், புஜாரா ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். லக்மலின் அபார பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் (79 ரன்கள்), புஜாரா (22 ரன்கள்), ரஹானே (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 

இதனை அடுத்து விராட்கோலியுடன் இணைந்த வீரர்களான ரவீந்திர ஜடேஜா (9 ரன்), அஸ்வின் (7 ரன்), விருத்திமான் சஹா (5 ரன்), புவனேஷ்வர்குமார் (8 ரன்) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் கேப்டன் விராட்கோலி பொறுப்புடன் நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அபாரமாக ஆடிய விராட்கோலி (104 ரன்கள், 119 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன்) லக்மல் பந்து வீச்சில் சிக்சர் தூக்கி சதத்தை எட்டினார். 61–வது டெஸ்டில் ஆடிய விராட்கோலி அடித்த 18–வது சதம் இதுவாகும். 

இந்திய அணி 
352 ரன்னுக்கு டிக்ளேர்

72 ரன்னில் இருக்கையில் விராட்கோலி லக்மல் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்ததாக நடுவர் அறிவித்தார். ஆனால் டி.ஆர்.எஸ். முறையில் இதனை எதிர்த்து விராட்கோலி அப்பீல் செய்தார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

விராட்கோலி சதம் அடித்ததும் இந்திய அணி 2–வது இன்னிங்சில் 88.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அப்போது கேப்டன் விராட்கோலி 104 ரன்னுடனும், முகமது ‌ஷமி 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் லக்மல், ‌ஷனகா தலா 3 விக்கெட்டும், காமகே, தில்ருவான் பெரேரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

விக்கெட்டுகள் சரிவு

பின்னர் 32 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணியினர், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்கள். இந்திய அணி சிலிப்பில்  அதிக பீல்டர்களை நிறுத்தி இலங்கை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

26.3 ஓவர்களில் இலங்கை அணி 75 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கும் தந்திரத்தை இலங்கை அணியினர் கையாண்டனர். பந்து வீச வரும்போது வேண்டும் என்றே கிரீசை விட்டு விலகி சென்ற டிக்வெல்லாவை, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார். 

ஆட்டம் டிரா

சுமார் 20 நிமிடங்கள் எஞ்சி இருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத பிரச்சினை காரணமாக சுமார் 2 நாள் ஆட்டம் பாதிப்புக்கு உள்ளானது. இல்லையெனில் இந்த ஆட்டத்தில் முடிவு கிடைத்து இருக்கும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.  

இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் வருகிற 24–ந் தேதி தொடங்குகிறது.  

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 172

இலங்கை 294

2–வது இன்னிங்ஸ்

இந்தியா

லோகேஷ் ராகுல் (பி) லக்மல்
79

ஷிகர் தவான் (சி) டிக்வெல்லா (பி) ‌ஷனகா 94

புஜாரா (சி) தில்ருவான் பெரேரா (பி) லக்மல் 22

விராட்கோலி (நாட்–அவுட்)104

ரஹானே எல்.பி.டபிள்யூ. (பி) லக்மல் 0

ரவீந்திர ஜடேஜா (சி) திரிமன்னே (பி) தில்ருவான் பெரேரா 9

அஸ்வின் (பி) ‌ஷனகா

விருத்திமான் சஹா (சி) சமரவிக்ரமா (பி) ‌ஷனகா 5

புவனேஷ்வர்குமார் (சி) தில்ருவான் பெரேரா (பி) காமகே 8

முகமது ‌ஷமி (நாட்–அவுட்)12

எக்ஸ்டிரா12

மொத்தம் (88.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு டிக்ளேர்) 352

விக்கெட் வீழ்ச்சி: 1–166, 2–192, 3–213, 4–213, 5–249, 6–269, 7–281, 8–321. 

பந்து வீச்சு விவரம்:

லக்மல்24.4–4–93–3

காமகே23–2–97–1

‌ஷனகா22–1–76–3

தில்ருவான் பெரேரா 13–2–49–1

ஹெராத்6–1–29–0

இலங்கை

சமரவிக்ரமா  (பி) புவனேஷ்வர்குமார்  0

கருணாரத்னே (பி)முகமது ‌ஷமி 1

திரிமன்னே (சி) ரஹானே (பி) புவனேஷ்வர்குமார் 7

மேத்யூஸ் எல்.பி.டபிள்யூ. (பி) உமேஷ்யாதவ் 12

சன்டிமால் (பி) முகமது ‌ஷமி20

டிக்வெல்லா எல்.பி.டபிள்யூ. (பி) புவனேஷ்வர்குமார் 27

‌ஷனகா (நாட்–அவுட்)
6

தில்ருவான் பெரேரா (பி) புவனேஷ்வர்குமார் 0

ஹெராத் (நாட்–அவுட்)0

எக்ஸ்டிரா2

மொத்தம் (26.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 75

விக்கெட் வீழ்ச்சி: 1–0, 2–2, 3–14, 4–22, 5–69, 6–69, 7–75.

பந்து வீச்சு விவரம்:

புவனேஷ்வர்குமார் 11–8–8–4 

முகமது ‌ஷமி9.3–4–34–2

உமேஷ் யாதவ்5–0–25–1

ரவீந்திர ஜடேஜா10–0–7–0

பந்து வீச்சாளர்களுக்கு விராட்கோலி பாராட்டு

கொல்கத்தா டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டத்தில் இருந்து ஏதாவது எடுக்க வேண்டியது முக்கியம் என்று நினைத்தோம். ஆனால் ஆடுகளத்தின் தன்மை 4–வது மற்றும் 5–வது நாளில் அதிக அளவில் மாற்றம் கண்டது. இலங்கை அணி பந்து வீச்சு நன்றாக இருந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் அதிக முன்னிலை பெறாவிட்டால் எங்களால் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று நம்பினோம். 2–வது இன்னிங்சில் இலங்கை அணியின் பேட்டிங் இந்த அளவுக்கு சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. புவனேஷ்வர்குமார் நல்ல வேகத்தில் பந்து வீசினார். கடுமையாக உழைக்கும் அவர் அதற்கு தகுந்த பலனை பெற்று வருகிறார். எங்களது அணியின் திட்டத்தில் புவனேஷ்வர்குமார் முக்கியமானவர். சர்வதேச போட்டியில் 50 சதங்களை கண்டு இருப்பது நல்ல வி‌ஷயமாகும். சதத்தை விட அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்’ என்று தெரிவித்தார். 

இலங்கை அணியின் கேப்டன் சன்டிமால் கருத்து தெரிவிக்கையில், ‘இதுபோன்ற சூழலில் டாஸ் முக்கியமானது. இந்த போட்டியில் நாங்கள் கடைசி வரை அணியாக நன்றாக போராடினோம். கடைசி 10–15 ஓவர்களில் அதிக நெருக்கடிக்கு ஆளானோம்’ என்றார்.

Next Story