அசத்தப்போவது யாரு? ஆஸ்திரேலியா–இங்கிலாந்து மோதும் ஆ‌ஷஸ் டெஸ்ட் நாளை தொடக்கம்


அசத்தப்போவது யாரு? ஆஸ்திரேலியா–இங்கிலாந்து மோதும் ஆ‌ஷஸ் டெஸ்ட் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 21 Nov 2017 10:00 PM GMT (Updated: 21 Nov 2017 8:25 PM GMT)

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.

ஆ‌ஷஸ் கிரிக்கெட்

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆ‌ஷஸ் கவுரவத்துக்காக எதையும் இழக்கத் தயார் என்கிற ரீதியில் இரு அணிகளும் களத்தில் ஆக்ரோ‌ஷமாக மல்லுகட்டி நிற்பார்கள். இதனால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. 4 ஆண்டுகள் இடைவெளிக்குள் தலா ஒரு முறை இவ்விரு நாடுகளிலும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் நடக்கும். கடைசியாக 2015–ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரில் இங்கிலாந்து அணி 3–2 கணக்கில் வென்று இருந்தது.

வார்னர் காயம்

இந்த முறை சொந்த மண்ணில் கால்பதிக்கும் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை நையபுடைக்கும் உத்வேகத்துடன் காத்திருக்கிறது. காயத்தில் இருந்து மீண்ட மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் அணிக்கு திரும்பியிருப்பது ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தியுள்ளது.

நேற்றைய பீல்டிங் பயிற்சியின் போது துணை கேப்டன் டேவிட் வார்னர் கழுத்தில் காயம் அடைந்தார். கழுத்தில் ஏற்பட்டுள்ள பிடிப்புக்கு சிகிச்சை பெறுவதாகவும், முதலாவது டெஸ்ட் போட்டிக்குள் முழு உடல்தகுதியை பெற்று விடுவேன் என்று நம்புவதாகவும் வார்னர் குறிப்பிட்டார். தொடக்க ஆட்டக்காரரான வார்னருடன் அறிமுக வீரர் கேமரூன் பான்கிராப்ட் களம் இறங்குகிறார். பேட்டிங், பந்துவீச்சில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு உள்ளூரில் விளையாடுவது சாதகமான அம்சமாகும்.

இங்கிலாந்து எப்படி?

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆ‌ஷஸ் கோப்பையை தக்கவைக்க தீவிர முனைப்பு காட்டுகிறது. கடந்த 5 ஆ‌ஷஸ் தொடர்களில் 4–ல் இங்கிலாந்து தான் மகுடம் சூடியது. ஆனால் இந்த முறை அவர்களின் ஆதிக்கம் நீடிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

அந்த அணிக்கு ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆணிவேராக விளங்கினார். பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் மிரட்டக்கூடியவர். இரவு விடுதியில் குடித்து விட்டு வாலிபரை தாக்கிய வழக்கில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. இதனால் அவர் அணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு விட்டார். அவர் இல்லாதது இங்கிலாந்துக்கு நிச்சயம் பின்னடைவாகும். ஆனால் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் எங்களால் சாதிக்க முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இருவரும் முதல் முறையாக ஆ‌ஷஸ் அணியை வழிநடத்துகிறார்கள். இதில் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவுக்கு ராசியான மைதானமாகும். இங்கு 1988–ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை யாரும் வீழ்த்தியது கிடையாது. கடந்த 29 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா இங்கு விளையாடியுள்ள 28 டெஸ்டுகளில் 21–ல் வெற்றியும், 7–ல் டிராவும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:–

ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், கேமரூன் பான்கிராப்ட், ஜாக்சன் பேர்டு, பேட் கம்மின்ஸ், ஹேன்ட்ஸ்கோம்ப், ஹேசில்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், டிம் பெய்ன், சாட் சயேர்ஸ், மிட்செல் ஸ்டார்க்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோ, ஜாக்பால், கேரி பேலன்ஸ், ஸ்டூவர்ட் பிராட், அலஸ்டயர் குக், மாசோன் கிரேன், பென் போக்ஸ், ஜார்ஜ் கார்டன், டேவிட் மலான், கிரேக் ஓவர்டான், மார்க் ஸ்டோன்மான், ஜேம்ஸ் வின்சி, கிறிஸ் வோக்ஸ்.

இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

‘ஆ‌ஷஸ்’ பெயர் வந்தது எப்படி?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் லண்டன் ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 85 ரன்கள் இலக்கை கூட எடுக்க முடியாமல் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டு போனது. இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா ருசித்த முதல் வெற்றி இது தான்.

இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை கண்டு கொதித்து போன ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ என்ற பத்திரிகை வித்தியாசமான இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், ‘இங்கிலாந்து கிரிக்கெட் செத்து விட்டது. அதன் உடலை எரித்து சாம்பலை (ஆ‌ஷஸ்) ஆஸ்திரேலியா எடுத்து செல்கிறது’ என்று எழுதப்பட்டிருந்தது. பிறகு 1882–83–ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது இழந்த ஆ‌ஷஸை மீண்டும் இங்கிலாந்து கொண்டு வருமா? என்ற அந்த பத்திரிகை கேள்வி எழுப்பியது. இங்கிலாந்து கேப்டன் இவோ பிலிக், இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை திரும்ப கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார். அதுபோலவே இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2–1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. அப்போது மெல்போர்னில் குழுமியிருந்த சில பெண்கள், கலைநயத்துடன் கூடிய சிறிய ஜாடியை இவா பிலிக்கிடம் பரிசாக அளித்தனர். இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை திரும்ப வழங்குகிறோம் என்பதை குறிப்பிடும் வகையில், ஸ்டம்பின் மீது வைக்கப்படும் பெய்ல்சை எரித்து அதன் சாம்பலை ஜாடிக்குள் வைத்திருந்தனர். இதன் பின்னணியில் தான் ஆ‌ஷஸ் பெயர் தோன்றியது. இவோ பிலிக் மறைந்த பிறகு அந்த சிறிய ஜாடி 1927–ம்ஆண்டு மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது அது லண்டன் லார்ட்சில் உள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மாதிரி கோப்பை தான் தொடரில் வெற்றி காணும் அணிக்கு பரிசாக வழங்கப்படுகிறது.

ஆ‌ஷஸ் பெயர் உருவான பிறகு இவ்விரு அணிகள் இடையே இதுவரை நடந்துள்ள டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தலா 32–ல் வெற்றி கண்டுள்ளன. 5 தொடர் சமனில் முடிந்தது.

தரவரிசை மாறுமா?

ஐ.சி.சி. டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் முதல் 7 இடங்களில் முறையே இந்தியா (125 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (111 புள்ளி), இங்கிலாந்து (105 புள்ளி), நியூசிலாந்து (97 புள்ளி), ஆஸ்திரேலியா (97 புள்ளி), இலங்கை (94 புள்ளி), பாகிஸ்தான் (88 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான ஆ‌ஷஸ் தொடரில் 2–0 அல்லது அதைவிட சிறந்த முடிவை ஆஸ்திரேலியா எட்டும் போது தரவரிசையில் 3–வது இடத்துக்கு முன்னேற முடியும். தொடரை 5–0 என்ற கணக்கில் முழுமையாக வென்றால் ஆஸ்திரேலியாவின் புள்ளி எண்ணிக்கை 106 ஆக உயரும். அப்போது இங்கிலாந்தின் புள்ளி எண்ணிக்கை 98 ஆக சரிவடையும். இதே போல் ஆஸ்திரேலியா 4–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினால் 104 புள்ளியையும், 4–1 அல்லது 3–0 என்ற கணக்கில் வென்றால் 103 புள்ளியையும், 3–1, 2–0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் பட்சத்தில் 102 புள்ளியையும் எட்டும்.

அதே சமயம் இங்கிலாந்து அணி ஆ‌ஷஸ் தொடரை 5–0 என்று முழுமையாக வசப்படுத்தினால் அதன் புள்ளி எண்ணிக்கை 110 ஆக உயரும். அவ்வாறான சமயத்தில் ஆஸ்திரேலியா 91 புள்ளிகளுடன் 6–வது இடத்துக்கு தள்ளப்படும். இங்கிலாந்து அணி 4–0 என்ற கணக்கில் வென்றால் 109 புள்ளி, 4–1, 3–0 என்ற கணக்கில் வென்றால் 108 புள்ளி, 3–2, 2–1, 1–0 என்ற கணக்கில் வென்றால் 106 புள்ளி ஆகிய நிலைகளை அடையும்.

போட்டி அட்டவணை

தேதி போட்டி மைதானம் இந்திய நேரம்

நவ.23–27 முதலாவது டெஸ்ட் பிரிஸ்பேன் அதிகாலை 5.30 மணி

டிச.2–6 2–வது டெஸ்ட் அடிலெய்டு காலை 9 மணி

டிச.14–18 3–வது டெஸ்ட் பெர்த் காலை 8 மணி

டிச.26–30 4–வது டெஸ்ட் மெல்போர்ன் அதிகாலை 5 மணி

ஜன.4–8 5–வது டெஸ்ட் சிட்னி அதிகாலை 5 மணி


Next Story