உலக சாதனையை சமன் செய்யும் உத்வேகத்தில் இந்திய அணி


உலக சாதனையை சமன் செய்யும் உத்வேகத்தில் இந்திய அணி
x
தினத்தந்தி 30 Nov 2017 11:45 PM GMT (Updated: 30 Nov 2017 7:34 PM GMT)

தொடர்ந்து 9-வது டெஸ்ட் தொடரை வெல்வதற்கு குறி: உலக சாதனையை சமன் செய்யும் உத்வேகத்தில் உள்ளது இந்திய அணி.

புதுடெல்லி,

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை ருசித்த அணியாக இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் திகழ்கிறது. இங்கிலாந்து அணி 1884-ம் ஆண்டில் இருந்து 1892-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருந்தது. இதே போல் ஆஸ்திரேலியா 2005-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுக்குள் தொடர்ந்து 9 தொடர்களை வசப்படுத்தி இருந்தது.

இந்த உலக சாதனையை சமன் செய்ய இந்திய அணிக்கு அருமையான சந்தர்ப்பம் கனிந்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. அதாவது 2015-ம் ஆண்டில் இலங்கை (2-1), தென்ஆப்பிரிக்கா (3-0), 2016-ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் (2-0), நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), 2017-ம் ஆண்டில் வங்காளதேசம் (1-0), ஆஸ்திரேலியா (2-1), இலங்கை (3-0) ஆகிய அணிகளை புரட்டியெடுத்தது.

இப்போது இலங்கை அணி மீண்டும் இந்தியாவுக்கு வந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் டிரா ஆன நிலையில், நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நாளை தொடங்கும் இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டிரா செய்தாலே போதும். இந்திய அணி இந்த தொடரையும் தனதாக்கி உலக சாதனையை சமன் செய்து விடும்.

இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி காணும் பட்சத்தில், அதிக டெஸ்ட் வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டன்களின் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சவுரவ் கங்குலியின் (21 வெற்றி) சாதனையை கோலி சமன் செய்வார்.

Next Story