ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 403 ரன்னில் ‘ஆல்-அவுட்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 403 ரன்னில் ‘ஆல்-அவுட்
x
தினத்தந்தி 15 Dec 2017 11:15 PM GMT (Updated: 15 Dec 2017 8:59 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 403 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது.

பெர்த்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்து இருந்தது. டேவிட் மலான் 110 ரன்னுடனும், ஜானி பேர்ஸ்டோ 75 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று டேவிட் மலான், பேர்ஸ்டோ தொடர்ந்து ஆடினார்கள். சிறப்பாக ஆடிய விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ தனது 4-வது சதத்தை எட்டினார். இவர்கள் இருவரும் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 450 ரன்களை கடக்கும் போல் தோன்றியது.

அணியின் ஸ்கோர் 368 ரன்களாக உயர்ந்த போது, இந்த கூட்டணி உடைந்தது. டேவிட் மலான், நாதன் லயன் வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்த போது, அது பேட்டின் விளிம்பில் பட்டு மேல்நோக்கி எழும்பியது. அதனை மாற்று ஆட்டக்காரர் ஹேன்ட்ஸ்கோம் கேட்ச் செய்தார். டேவிட் மலான் 227 பந்துகளில் 19 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 140 ரன்கள் எடுத்தார்.

மலான்-பேர்ஸ்டோ ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேகரித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5-வது விக்கெட்டுக்கு இங்கிலாந்து இணை சேர்த்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 1938-ம் ஆண்டில் இங்கிலாந்தின் டென்னிஸ் காம்ப்டன்-எட்டி பெய்ன்டிர் ஜோடி 206 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

இந்த ஜோடி பிரிந்ததும் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. எஞ்சிய விக்கெட்டுகள் மள, மளவென சரிந்தன. மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும், கிறிஸ்வோக்ஸ் 8 ரன்னிலும், பேர்ட்ஸ்டோ 119 ரன்களிலும் (215 பந்து, 18 பவுண்டரி), ஓவர்டென் 2 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 12 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினர். 35 ரன்களுக்குள் கடைசி 6 விக்கெட்டுகளை இங்கிலாந்து பறிகொடுத்தது.

மதிய உணவு இடைவேளைக்கு முன்பு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 115.1 ஓவர்களில் 403 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் எடுப்பது 2006-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், நாதன் லயன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 22 ரன்னிலும், பான்கிராப்ட் 25 ரன்னிலும் நடையை கட்டினர். பின்னர் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், உஸ்மான் கவாஜாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். கவாஜா தனது பங்குக்கு 50 ரன்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 62 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தள்ளது. ஸ்டீவன் சுமித் 92 ரன்களுடனும் (122 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷான் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் நிற்கிறார்கள். 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Next Story