ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: 900 புள்ளிகளை எட்டினார், விராட் கோலி


ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: 900 புள்ளிகளை எட்டினார், விராட் கோலி
x
தினத்தந்தி 18 Jan 2018 9:15 PM GMT (Updated: 18 Jan 2018 8:43 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 947 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை அலங்கரிக்கிறார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் சதம் (153 ரன்) விளாசியதன் மூலம் கூடுதலாக 20 புள்ளிகளை சேகரித்த இந்திய கேப்டன் விராட் கோலி மொத்தம் 900 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி மறுபடியும் 2-வது இடத்துக்கு வந்துள்ளார். 900 புள்ளிகளை தொட்ட 31-வது பேட்ஸ்மேன், இந்திய அளவில் 2-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெற்று இருக்கிறார். இந்திய வீரர்களில் இதற்கு முன்பு சுனில் கவாஸ்கர் மட்டுமே இந்த இலக்கை (1979-ம் ஆண்டில் 916 புள்ளிகளை பெற்றார்) எட்டியிருந்தார். அதே சமயம் ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர் (அதிகபட்சம் 896 புள்ளி), ராகுல் டிராவிட் (892 புள்ளி) ஆகியோர் இந்த மைல்கல்லை நெருங்கினார்களே தவிர கடைசி வரை தொட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவன் சுமித், கோலிக்கு அடுத்து இங்கிலாந்தின் ஜோ ரூட் 3-வது இடமும் (881 புள்ளி), நியூசிலாந்தின் வில்லியம்சன் 4-வது இடமும் (855 புள்ளி), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5-வது இடமும் (827 புள்ளி), இந்தியாவின் புஜாரா 6-வது இடமும் (814 புள்ளி) வகிக்கிறார்கள்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா முதலிடத்தை பறிகொடுத்துள்ளார். செஞ்சூரியன் டெஸ்டில் பெரிய அளவில் ஜொலிக்காததால் ரபடா (872 புள்ளி) 2-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (887 புள்ளி) ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார். 3-வது இடத்தில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் (853 புள்ளி), 4-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட்டும் (814 புள்ளி) உள்ளனர். ஒரு இடம் சறுக்கிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5-வது இடத்தில் (811 புள்ளி) இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2 இடம் உயர்ந்து 17-வது இடத்தை பிடித்துள்ளார்.

Next Story