சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஸ்வினை எடுக்க முயற்சிப்போம் டோனி பேட்டி


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஸ்வினை எடுக்க முயற்சிப்போம் டோனி பேட்டி
x
தினத்தந்தி 19 Jan 2018 10:30 PM GMT (Updated: 19 Jan 2018 8:55 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தின் போது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்க முயற்சிப்போம் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார்.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தின் போது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுக்க முயற்சிப்போம் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார்.

3 வீரர்கள் தக்க வைப்பு

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. சூதாட்ட புகாரில் சிக்கியதால் 2 ஆண்டு தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு மீண்டும் போட்டிக்கு திரும்புகிறது.

முதல் 8 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டோனி, சுரேஷ்ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை இந்த சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்து இருக்கிறது. ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ மூலம் மேலும் 2 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம். எஞ்சிய வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும்.

ஊக்குவிப்பு சலுகை அறிமுகம்

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்து வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது நுகர்வோருக்கு புதிய ஊக்குவிப்பு சலுகைகளை நேற்று அறிவித்தது. ‘வீடு கட்டு விசில் போடு’ என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டி-சர்ட், தொப்பி, பேட், பந்து, டோனியின் புகைப்படம் உள்ளிட்டவற்றை நுகர்வோர் பரிசாக வெல்ல வாய்ப்பு உள்ளது.

இந்த புதிய ஊக்குவிப்பு சலுகை திட்டத்தை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் ரூபா குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஆகியோர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் டீலர்கள் முன்னிலையில் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தினார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன டீலர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். ஏப்ரல் 19-ந் தேதி வரை இந்த சலுகையை பெறலாம்.

டோனி பேட்டி

நிகழ்ச்சியில் பங்கேற்ற டோனி பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையை எப்பொழுதும் நான் எனது 2-வது சொந்த ஊராகவே பாவிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கு தான் எனது அதிகபட்ச ரன்களை குவித்தேன். சென்னை ரசிகர்கள் என்னை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். என்னை அவர்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான எதிர்பார்ப்பு இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை மேலும் சிறப்பானதாக மாற்றி இருக்கிறது. சென்னை அணியில் அதிக எண்ணிக்கையில் உள்ளூர் வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை தக்கவைக்க முடியாமல் போனது கடினமான முடிவாகும். உள்ளூர் வீரரான அவரை ஏலம் மூலம் அணிக்கு எடுக்க நிச்சயம் முயற்சிப்போம். ஏலத்தில் அவருக்கே முன்னுரிமை அளிப்போம். இதே போல் முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய வெய்ன் பிராவோ, பாப் டு பிளிஸ்சிஸ், பிரன்டன் மெக்கல்லம் ஆகியோரும் எங்களது கவனத்தில் உள்ளனர். முன்பு போல் வலுவான அணியாக உருவெடுக்க திட்டமிட்டு செயலாற்றுவோம்.

மற்ற அணிக்காக ஆடும் எண்ணம் இல்லை

கடந்த 2 ஆண்டுகளாக புனே அணிக்காக விளையாடினாலும், சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். என்னை பல அணிகள் அணுகின. சென்னையை தவிர வேறு அணிக்காக விளையாடும் எண்ணம் எனது மனதில் ஒருபோதும் எழுந்தது கிடையாது.

சென்னை அணி 2 ஆண்டுகள் விளையாடாவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவு பெருகி கொண்டு தான் உள்ளது. ரசிகர்களின் நம்பிக்கையும், ஆதரவும் தான் சென்னை அணியின் பலம். அனைத்து வீரர்களும் தனது திறமையை வெளிப்படுத்தும் சூழல் சென்னை அணியில் எப்போதும் உண்டு.

நல்ல அறிகுறி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் பவுலர்கள் எல்லா இன்னிங்சிலும் அனைத்து விக்கெட்டையும் வீழ்த்தியது நல்ல அறிகுறியாகும். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் (இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து) வீழ்த்தி ஆக வேண்டும். 20 விக்கெட்டுகளை கைப்பற்ற இயலாவிட்டால் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கு நடந்தாலும் அந்த டெஸ்ட் போட்டியில் வெல்ல முடியாது. எனவே நமது பவுலர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமாகும். 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், போதுமான ரன்களை எடுத்தால் வெற்றி வாய்ப்பை எட்டலாம்.

இவ்வாறு டோனி கூறினார்.

Next Story