16 பேருக்கு முத்திரை வீரர்கள் அந்தஸ்து: ஐ.பி.எல். ஏலத்தின் இறுதிப்பட்டியலில் 578 வீரர்கள்


16 பேருக்கு முத்திரை வீரர்கள் அந்தஸ்து: ஐ.பி.எல். ஏலத்தின் இறுதிப்பட்டியலில் 578 வீரர்கள்
x
தினத்தந்தி 20 Jan 2018 9:30 PM GMT (Updated: 20 Jan 2018 8:49 PM GMT)

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது.

புதுடெல்லி,

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 1,122 வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்து இருந்தனர். அவர்களில் இருந்து 578 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இவர்களில் 360 இந்தியர்களும் அடங்குவர்.

சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, ரூ.75 லட்சம், ரூ.50 லட்சம் வீதமும், சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு ரூ.40 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் என்ற வீதமும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யுவராஜ்சிங், அஸ்வின், ரஹானே, ஷிகர் தவான், கவுதம் கம்பீர், ஹர்பஜன்சிங் (6 பேரும் இந்தியர்கள்), பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் (இங்கிலாந்து), மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட், வெய்ன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), கனே வில்லியம்சன் (நியூசிலாந்து), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), பாப் டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா) ஆகிய 16 வீரர்கள் முத்திரை வீரர்கள் என்ற அந்தஸ்துடன் இரண்டு பிரிவாக பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Next Story