லா லிகா லீக் கால்பந்து போட்டி ரியல் மாட்ரிட் அணிக்கு 17–வது வெற்றி


லா லிகா லீக் கால்பந்து போட்டி ரியல் மாட்ரிட் அணிக்கு 17–வது வெற்றி
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 27 Feb 2017 8:38 PM GMT)

லா லிகா லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 17–வது வெற்றியை ருசித்தது.

மாட்ரிட்,

ஸ்பெயினில் முன்னணி கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் லா லிகா லீக் கால்பந்து போட்டி பிரபலமானதாகும். 86–வது லா லிகா லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும்.

இந்த போட்டி தொடரில் மாட்ரிட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் 32 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, வில்லார் ரியல் அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்புகள் பலமுறை கிடைத்தாலும் கோல் எதுவும் விழவில்லை.

வில்லார் ரியல் முன்னிலை

50–வது நிமிடத்தில் வில்லார் ரியல் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் மானு டிரிகுரோஸ் இந்த கோலை அடித்தார். 56–வது நிமிடத்தில் வில்லார் ரியல் அணி 2–வது கோலை போட்டது. அந்த அணியின் செட்ரிக் பாகாம்பு இந்த கோலை திணித்தார். இதனால் வில்லார் ரியல் அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

எனவே கடந்த லீக் ஆட்டத்தில் வாலென்சியா அணிக்கு எதிராக ரியல் மாட்ரிட் அணிக்கு நேர்ந்த கதி (1–2 என்ற கோல் கணக்கில் தோல்வி) இந்த போட்டியிலும் நிகழ்ந்து விடுமோ? என்று ரசிகர்கள் கலக்கமடைந்தனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

ஆனால் அதன் பிறகு ரியல் மாட்ரிட் அணி ஆக்ரோ‌ஷமாக ஆடி அடுத்தடுத்து கோல் திருப்பி சரிவில் இருந்து மீண்டது. 64–வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி வீரர் காரத்பாலே முதல் கோல் திருப்பினார். 74–வது நிமிடத்தில் வில்லார் ரியல் அணி கேப்டன் புருனோ பந்தை கையால் கையாண்டதால் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார்.

பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த 57–வது கோல் இதுவாகும். இதன் மூலம் லா லிகா போட்டி வரலாற்றில் பெனால்டி வாய்ப்பில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றார். 83–வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி வீரர் அல்வரோ மொராடா 3–வது கோலை அடித்தார்.

ரியல் மாட்ரிட் அணிக்கு 17–வது வெற்றி

பின்னர் இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் அணி 3–2 என்ற கோல் கணக்கில் வில்லார் ரியல் அணியை வீழ்த்தி 17–வது வெற்றியை ருசித்தது.

மே 21–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ரியல் மாட்ரிட் அணி இதுவரை 23 லீக் ஆட்டங்களில் விளையாடி 17 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் 55 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 24 ஆட்டங்களில் ஆடி 16 வெற்றி, 6 டிரா, 2 தோல்வியுடன் 54 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், செவிலியா அணி 24 ஆட்டங்களில் ஆடி 16 வெற்றி, 4 டிரா, 4 தோல்வியுடன் 52 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளன.


Next Story