லா லிகா லீக் கால்பந்து: பார்சிலோனா அணிக்கு 17-வது வெற்றி ரியல் மாட்ரிட்-லாஸ் பால்மாஸ் ஆட்டம் ‘டிரா’


லா லிகா லீக் கால்பந்து: பார்சிலோனா அணிக்கு 17-வது வெற்றி ரியல் மாட்ரிட்-லாஸ் பால்மாஸ் ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 2 March 2017 9:38 PM GMT (Updated: 2 March 2017 9:38 PM GMT)

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 17-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

மாட்ரிட்,

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 17-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ரியல் மாட்ரிட்-லாஸ் பால்மாஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

லா லிகா கால்பந்து

ஸ்பெயினில் முன்னணி கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் லா லிகா லீக் கால்பந்து போட்டி பிரபலமானதாகும். 86-வது லா லிகா லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும்.

மாட்ரிட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணி, லால் பால்மாஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வீரர் இஸ்கோ 8-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 10-வது நிமிடத்தில் லாஸ் பால்மாஸ் பதில் கோல் திருப்பியது. இந்த கோலை அந்த அணி வீரர் தாரா அருமையாக திணித்தார். முதல் பாதியில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது.

ஆட்டம் டிரா

பிற்பாதியின் தொடக்கத்தில் ரியல் மாட்ரிட் அணி வீரர் காரத் பாலே 2-வது முறையாக ‘பவுல்’ செய்ததால் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி 56-வது மற்றும் 59-வது நிமிடத்தில் லாஸ் பால்மாஸ் அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அசத்தியது. முறையே அந்த அணியின் ஜோனதன் வியரா, போடெங் ஆகியோர் இந்த கோலை அடித்தனர். இதனால் லால் பால்மாஸ் 3-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

ரியல் மாட்ரிட் அணி தோல்வியை சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 86-வது, 89-வது நிமிடத்தில் அதிரடியாக கோல் போட்டு அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். அதன் பிறகு இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

பார்சிலோனா அணி முன்னிலை

மற்றொரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் ஜிஜோன் அணியை எளிதில் தோற்கடித்தது.

இதுவரை 25 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் பார்சிலோனா அணி 17 வெற்றி, 6 டிரா, 2 தோல்வியுடன் 57 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் அணி 24 ஆட்டத்தில் ஆடி 17 வெற்றி, 5 டிரா, 2 தோல்வியுடன் 56 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது. செவிலா அணி 24 ஆட்டத்தில் ஆடி 16 வெற்றி, 4 டிரா, 4 தோல்வியுடன் 52 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

Next Story