வெளிநாட்டு மண்ணில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி வெற்றி 3–2 கோல் கணக்கில் கம்போடியாவை வீழ்த்தியது


வெளிநாட்டு மண்ணில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி வெற்றி 3–2 கோல் கணக்கில் கம்போடியாவை வீழ்த்தியது
x
தினத்தந்தி 22 March 2017 11:30 PM GMT (Updated: 22 March 2017 7:15 PM GMT)

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இந்திய அணி 3–2 என்ற கோல் கணக்கில் கம்போடியாவை வீழ்த்தி வெளிநாட்டு மண்ணில் 11 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது.

பனோம்பென்,

இந்தியா–கம்போடியா அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி கம்போடியாவில் உள்ள பனோம்பென்னில் நேற்று நடந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 35–வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி இந்த கோலை அடித்தார். 38–வது நிமிடத்தில் கம்போடியா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் கோன் லேபோராவி இந்த கோலை திணித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

இந்திய அணி வெற்றி

பின் பாதியின் முதல் 10 நிமிடங்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதுடன் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அசத்தியது. மாற்று ஆட்டக்காரராக களம் கண்ட ஜெஜெ லால்பெகுலா 49–வது நிமிடத்தில் கோல் அடித்தார். 52–வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் சந்தேஷ் ஜின்கன் அபாரமாக கோல் போட்டார். இதனால் இந்திய அணி 3–1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

62–வது நிமிடத்தில் கம்போடியா அணி சான் வதனகா அற்புதமாக 2–வது கோலை திருப்பினார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 3–2 என்ற கோல் கணக்கில் கம்போடியாவை தோற்கடித்தது.

11 ஆண்டுகளுக்கு பிறகு...

செயற்கை இழை மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. உலக தர வரிசையில் 132–வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 173–வது இடத்தில் உள்ள கம்போடியாவை போராடி தான் வெற்றி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு மண்ணில் இந்திய கால்பந்து அணி வெற்றி வாகை சூடுவது என்பது அரிதான வி‌ஷயமாகும். கடைசியாக 2006–ம் ஆண்டில் அன்னிய மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்த இந்திய அணி, 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளிநாட்டு மண்ணில் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.

இந்திய அணி அடுத்து ஆசிய கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் மியான்மர் அணியை வருகிற 28–ந் தேதி சந்திக்கிறது.


Next Story