சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அரைஇறுதிக்கு தகுதி


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 19 April 2017 11:30 PM GMT (Updated: 19 April 2017 7:33 PM GMT)

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

மாட்ரிட்,

 இதில் மாட்ரிட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)– பெயர்ன் முனிச் (ஜெர்மனி) கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெயர்ன் முனிச் அணி 53–வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் ராபர்ட் லீவான்டோவ்ஸ்கி இந்த கோலை அடித்தார். 76–வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பதில் கோல் திருப்பி சமநிலையை ஏற்படுத்தினார். 78–வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி வீரர் செர்ஜியோ ரமோஸ் சுயகோல் அடித்தார். இதனால் பெயர்ன் முனிச் அணி 2–1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்ட நேரம் முடிவில் பெயர்ன் முனிச் அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. ஆனால் கால்இறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்ததால் இரு அணிகளும் 3–3 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டின. இதனால் அரைஇறுதி வாய்ப்பு யாருக்கு என்பதை நிர்ணயிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடுத்தடுத்து 2 கோல்கள் (105–வது மற்றும் 110–வது நிமிடம்) அடித்ததன் மூலம் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். ரியல் மாட்ரிட் அணியின் மார்கோ அசென்சியோ 112–வது நிமிடத்தில் கோல் அடித்தார். கூடுதல் நேரம் முடிவில் ரியல் மாட்ரிட் அணி 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டு கால்இறுதி சுற்று முடிவின் அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி 6–3 என்ற கோல் கணக்கில் பெயர்ன் முனிச்சை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அரைஇறுதியில் ரியல் மாட்ரிட் அணி, அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) கிளப்பை சந்திக்கிறது.


Next Story