இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் சுப்ரதா பால் ஊக்க மருந்தில் சிக்கினார்


இந்திய  கால்பந்து  அணியின்  கோல்கீப்பர் சுப்ரதா  பால்  ஊக்க  மருந்தில்  சிக்கினார்
x
தினத்தந்தி 25 April 2017 8:45 PM GMT (Updated: 25 April 2017 8:44 PM GMT)

இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் சுப்ரதா பால் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் சுப்ரதா பால் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோல்கீப்பர் சுப்ரதா பால்

இந்திய கால்பந்து அணியின் முன்னணி கோல் கீப்பராக விளங்கி வருபவர் சுப்ரதா பால். தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள சுப்ரதா பால் 2007–ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 64 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சுப்ரதா பால் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தாலும் ஆடும் லெவன் அணியில் களம் இறங்குவதில்லை.

பல சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கி இருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த 30 வயதான சுப்ரதா பால் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை மற்றும் கவுகாத்தி அணிக்காக விளையாடி இருக்கிறார். அவர் 2016–ம் ஆண்டில் சிறந்த வீரருக்கான அர்ஜூனா விருதும் பெற்றுள்ளார்.

ஊக்க மருந்தில் சிக்கினார்

கடந்த மாதம் மும்பையில் நடந்த இந்திய கால்பந்து அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சுப்ரதா பாலிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகள் ஊக்க மருந்து சோதனைக்காக மாதிரி சேகரித்தனர். இந்த சோதனையின் முடிவு நேற்று வெளியானது. இதில் சுப்ரதா பால் ‘டெர்புடாலின்’ என்னும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. மூச்சு விட சிரமப்படுபவர்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் சிகிச்சைக்கு பயன்படுத்தும் மருந்து இதுவாகும். விளையாட்டு வீரர்கள் இந்த மருந்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் அறிக்கையை தொடர்ந்து அகில இந்திய கால்பந்து சங்கம் சுப்ரதா பாலை தற்காலிக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் அவர் எந்தவித போட்டியிலும் விளையாட முடியாது. ஐ லீக் போட்டியில் டி.எஸ்.கே.சிவாஜியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுப்ரதா பால் வருகிற 30–ந் தேதி நடைபெறும் மினர்வா மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட இயலாது. முதல்முறையாக ஊக்க மருந்து சோதனையில் சிக்குபவர்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டு வரை விளையாட தடை விதிக்கப்படும்.  

தவறு செய்யவில்லை

தன் மீதான ஊக்க மருந்து சர்ச்சை குறித்து சுப்ரதா பால் கருத்து தெரிவிக்கையில், ‘ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வி அடைந்து இருப்பதாக வெளியான செய்தியால் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மீடியாக்கள் மூலம் தான் எனக்கு இந்த தகவல் கிடைத்தது. இதுகுறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு கழகம் மற்றும் அகில இந்திய கால்பந்து சங்கத்திடம் இருந்து அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் வரவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. நிரபராதி என்பதை நிரூபிப்பேன். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் நேர்மையாகவும், நியாயமாகவும் இந்த ஆட்டத்தை விளையாடி வருகிறேன். இதுவரை 15 முறை எனக்கு இது மாதிரி சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அதில் ஒருமுறையும் பிரச்சினை வரவில்லை. எனது ‘பி’ மாதிரியை சோதனை செய்யும்படி கேட்பேன். ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடையும் வகையில் நான் எதுவும் செய்யவில்லை’ என்றார்.

Next Story