ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல்மாட்ரிட் கிளப் 12-வது முறையாக சாம்பியன்


ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல்மாட்ரிட் கிளப் 12-வது முறையாக சாம்பியன்
x
தினத்தந்தி 4 Jun 2017 10:15 PM GMT (Updated: 4 Jun 2017 9:04 PM GMT)

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் கிளப் அணி 12-வது முறையாக மகுடம் சூடியது.

கார்டிப்,

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் கிளப் அணி 12-வது முறையாக மகுடம் சூடியது. ரொனால்டோ இரட்டை கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து

62-வது ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்தது. இந்த சீசனில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. இதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் கிளப்பும் இத்தாலியை சேர்ந்த யுவென்டஸ் கிளப்பும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் இவ்விரு அணிகளும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் கார்டிப்பில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு மல்லுகட்டின.

எதிர்பார்த்தது போலவே நட்சத்திர வீரர்கள் அடங்கிய ரியல்மாட்ரிட் கிளப் ஆதிக்கம் செலுத்தியது. அதிகமான நேரம் (56 சதவீதம்) இவர்கள் வசமே பந்து சுற்றிக்கொண்டு இருந்தது. 20-வது நிமிடத்தில் சக வீரர் டேனி கார்வஜால் வலதுபக்கத்தில இருந்து தட்டிக்கொடுத்த பந்தை ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா கோலாக்கினார். 29-வது நிமிடத்தில் யுவென்டஸ் வீரர் மரியோ மான்ட்ஜூகிச் பதில் கோல் திருப்ப, முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

ரியல்மாட்ரிட் சாம்பியன்

பிற்பாதியில் ரியல்மாட்ரிட் வீரர்கள் மேலும் ஆவேசமாக ஆடினார்கள். 61-வது நிமிடத்தில் காஸ்மிரோ, 64-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 90-வது நமிடத்தில் அசென்சியோ ஆகியோர் கோல் போட்டு அசத்தினர். முடிவில் ரியல்மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் யுவென்டசை வீழ்த்தி 12-வது முறையாக இந்த கோப்பையை வசப்படுத்தியது. சாம்பியன்ஸ் லீக் கோப்பையை அதிக முறை வென்ற அணி ரியல்மாட்ரிட் தான். அடுத்த இடத்தில் மிலன் கிளப் (7 முறை) உள்ளது. வாகை சூடிய ரியல்மாட்ரிட் ரூ.391 கோடியை பரிசுத்தொகையாக பெற்றது.

ரியல்மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்று இறுதிப்போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த சீசனில் அதிக கோல்கள் அடித்தவர்களில் பார்சிலோனா வீரர் மெஸ்சியையும் (11 கோல்) அவர் முந்தினார். ரொனால்டோ 12 கோல்கள் அடித்துள்ளார்.

ரொனால்டோ பூரிப்பு

ரொனால்டோவுக்கு இது 4-வது சாம்பியன்ஸ் லீக் மகுடம் ஆகும். அவர் கூறுகையில், ‘சாம்பியன்ஸ் லீக்கில் அடுத்தடுத்த ஆண்டுகளில் கோப்பையை வென்ற முதல் அணி ரியல்மாட்ரிட் என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் இதை போன்று என்னால் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. மக்கள் இனி என்னை விமர்சிக்க இயலாது. ஏனெனில் சாதனைகள் பொய் சொல்லாது’ என்றார். போர்ச்சுல் நாட்டவரான ரொனால்டோ, கிளப், சர்வதேச போட்டி உள்பட இதுவரை 600 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1,500 ரசிகர்கள் காயம்

இதற்கிடையே இந்த ஆட்டத்தை இத்தாலியின் துரின் நகரில் மெகாதிரையில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் வெடிகுண்டு பீதி கிளம்பியதால் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


Next Story