உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு மெக்சிகோ தகுதி


உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு மெக்சிகோ தகுதி
x
தினத்தந்தி 2 Sep 2017 8:45 PM GMT (Updated: 2 Sep 2017 8:20 PM GMT)

32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018–ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது.

மெக்சிகோ,

32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018–ம் ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் அடங்கிய நாடுகளுக்கான தகுதி சுற்றின் 5–வது ரவுண்டில் மொத்தம் 6 அணிகள் விளையாடி வருகின்றன. இவற்றில் இருந்து டாப்–3 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெறும். 4–வது இடம் பெறும் அணி ‘பிளே–ஆப்’ சுற்றில் விளையாட வேண்டி இருக்கும்.

இந்த நிலையில் இந்த பிரிவில் மெக்சிகோ சிட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் மெக்சிகோ அணி 1–0 என்ற கோல் கணக்கில் பனாமாவை தோற்கடித்தது. வெற்றிக்குரிய கோலை ஹிர்விங் லோஜானோ 53–வது நிமிடத்தில் அடித்தார்.

இதன் மூலம் தனது பிரிவில் 17 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 டிரா) முதலிடம் வகிக்கும் மெக்சிகோ அணி இந்த பிரிவில் இருந்து முதல் அணியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் 0–2 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவிடம் தோற்ற அமெரிக்காவுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. கோஸ்டாரிகா 14 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், அமெரிக்கா 8 புள்ளிகளுடன் (2 வெற்றி, 2 டிரா, 3 தோல்வி) 3–வது இடத்திலும், ஹோண்டுராஸ் 8 புள்ளிகளுடன் 4–வது இடத்திலும், பனாமா 7 புள்ளியுடன் 5–வது இடத்திலும், டிரினிடாட் அன்ட் டொகாக்கோ 3 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளன. இந்த பிரிவில் ஒவ்வொரு அணிக்கும் தலா 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

2018–ம் ஆண்டு உலக கோப்பைக்கு தகுதி பெற்ற 5–வது அணி மெக்சிகோ ஆகும். ஏற்கனவே பிரேசில், ஜப்பான், ஈரான், போட்டியை நடத்தும் ரஷியா ஆகிய அணிகளும் உலக கோப்பையில் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன.


Next Story