சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: யுவன்டசை பழிதீர்த்தது பார்சிலோனா


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: யுவன்டசை பழிதீர்த்தது பார்சிலோனா
x
தினத்தந்தி 13 Sep 2017 11:45 PM GMT (Updated: 13 Sep 2017 6:50 PM GMT)

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான 63–வது சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

பார்சிலோனா, 

அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெறும் இந்த தொடரில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர்–வெளியூர் அடிப்படையில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் ‘டி’ பிரிவில் அங்கம் வகிக்கும் புகழ்பெற்ற பார்சிலோனா கிளப் (ஸ்பெயின்), தனது முதல் ஆட்டத்தில் யுவன்டஸ் அணியை (இத்தாலி) எதிர்கொண்டது. பார்சிலோனா நகரின் நோகேம்ப் ஸ்டேடியத்தில் நடந்த இந்த மோதலில் ஆக்ரோ‌ஷமான பாணியை கையாண்ட பார்சிலோனா கிளப் 3–0 என்ற கோல் கணக்கில் யுவன்டசை வீழ்த்தி மிரட்டியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி 2 கோலும் (45 மற்றும் 69–வது நிமிடம்), இவான் ராகிடிச் (56–வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர். கடந்த சீசனில் கால்இறுதியில் யுவன்டஸ் அணி, பார்சிலோனாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு இப்போது பார்சிலோனா பழிதீர்த்துக் கொண்டது. ஐரோப்பிய கிளப் போட்டியில் மெஸ்சியின் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.

‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாரீஸ் ஜெயன்ட்–ஜெர்மைன் (பிரான்ஸ்) அணி 5–0 என்ற கோல் கணக்கில் செல்டிக்கை (ஸ்காட்லாந்து) பந்தாடியது. சமீபத்தில் ஜெர்மைன் அணிக்கு மாறிய நெய்மார் தொடக்க கோலை அடித்தார்.

Next Story