ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தியது இங்கிலாந்து


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தியது இங்கிலாந்து
x
தினத்தந்தி 11 Oct 2017 11:45 PM GMT (Updated: 11 Oct 2017 10:05 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி முன்னாள் சாம்பியன் மெக்சிகோவை 3-2 என்ற கோல் கணக்கில் பதம் பார்த்தது.

புதுடெல்லி,

17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக லீக்கில் மோதுகின்றன.

முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த கால்பந்து திருவிழாவில் கவுகாத்தியில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் (இ பிரிவு) ஜப்பானை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் அடுத்த சுற்றை உறுதி செய்தது. இதே பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான நியூகலிடோனியாவை ஊதித்தள்ளியது.

கொல்கத்தாவில் அரங்கேறிய ‘எப்’ பிரிவு லீக்கில் 2 முறை சாம்பியனான மெக்சிகோ, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆக்ரோஷமான பாணியை கையாண்ட இங்கிலாந்து வீரர்கள் மெக்சிகோ அணியை தடுமாற வைத்தனர். 39-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ரையான் பிரேவ்ஸ்டர் ‘பிரிகிக்’ வாய்ப்பில் 23 மீட்டர் தூரத்தில் இருந்து சூப்பராக ஒரு ஷாட் அடித்து பந்தை வலைக்குள் தள்ளினார். பிற்பாதியில் போடென் (48-வது நிமிடம்), ஜாடோன் சாஞ்சோ (55-வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு இங்கிலாந்துக்கு 3-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை ஏற்படுத்தி தந்தனர்.

அதன் பிறகு மெக்சிகோ வீரர் டியாகோ லைனிஸ் (65 மற்றும் 72-வது நிமிடம்) இரட்டை கோல் அடித்தாலும் இங்கிலாந்தின் ‘வீறுநடை’யை தடுக்க இயலவில்லை.

திரிலிங்கான ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை சாய்த்து 2-வது வெற்றியை ருசித்ததுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. அதே சமயம் தனது முதல் லீக்கில் ஈராக்குடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்திருந்த மெக்சிகோவுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஈராக் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சிலிக்கு அதிர்ச்சி அளித்தது.

Next Story