ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: 2-வது சுற்றுக்கு ஜெர்மனி தகுதி


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: 2-வது சுற்றுக்கு ஜெர்மனி தகுதி
x
தினத்தந்தி 13 Oct 2017 10:15 PM GMT (Updated: 13 Oct 2017 7:39 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி 3-1 என்ற கோல் கணக்கில் கினியாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

கொச்சி,

17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி(17 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

கொச்சியில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி-கினியா அணிகள் (சி பிரிவு) சந்தித்தன. ஆப்பிரிக்க தேசமான கினியா கடும் நெருக்கடி கொடுத்த போதிலும் அதை சமாளித்து ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கேப்டன் ஜான் பியட்டி அர்ப், நிகோலஸ் குன், சவெர்டி செட்டின் ஆகியோர் ஜெர்மனி அணியில் கோல் போட்டனர். கினியா 24 ஷாட்டுகளை அடித்த போதிலும் அவற்றில் ஒன்றை மட்டுமே கோலாக்க முடிந்தது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஈரான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது. முதல் இரு கோல்கள் பெனால்டி வாய்ப்பின் மூலம் ஈரான் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த ஈரான் (3 வெற்றியுடன் 9 புள்ளி), ஜெர்மனி (2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளி) 2-வது சுற்றுக்கு முன்னேறியது. தலா ஒரு புள்ளி மட்டுமே பெற்றுள்ள கினியா, கோஸ்டாரிகா அணிகள் ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

இரவில் ‘டி’ பிரிவில் அரங்கேறிய ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான நைஜரையும், ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் வடகொரியாவையும் சாய்த்தது. பிரேசில் அணியில் லின்கான், பிரினெர் கோல் போட்டனர்.

பிரேசில் (3 வெற்றியுடன் 9 புள்ளி), ஸ்பெயின் (6 புள்ளி) அணிகள் 2-வது சுற்றை எட்டியது. ஒரு வெற்றியும் பெறாத வடகொரியா நடையை கட்டியது. 3 புள்ளிகளுடன் நைஜர் காத்திருக்கிறது.

இந்த கால்பந்து திருவிழாவில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. இன்றைய கடைசி லீக் ஆட்டங்களில் பிரான்ஸ்- ஹோண்டுராஸ், ஜப்பான்-நியூ கலிடோனியா (மாலை 5 மணி), மெக்சிகோ-சிலி, இங்கிலாந்து-ஈராக் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story