ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனி, அமெரிக்கா அணிகள் கால்இறுதிக்கு தகுதி


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனி, அமெரிக்கா அணிகள் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 16 Oct 2017 10:30 PM GMT (Updated: 16 Oct 2017 7:56 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டங்களில் ஜெர்மனி, அமெரிக்கா அணிகள் அபார வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறின.

புதுடெல்லி,

இந்தியாவில் நடந்து வரும் 17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் (17 வயதுக்குட்பட்டோர்) லீக் சுற்று முடிவில் கானா, கொலம்பியா, அமெரிக்கா (ஏ பிரிவு), பராகுவே, மாலி (பி), ஈரான், ஜெர்மனி (சி), பிரேசில், ஸ்பெயின், நைஜர் (டி), பிரான்ஸ், ஜப்பான், ஹோண்டுராஸ் (இ), இங்கிலாந்து, ஈராக், மெக்சிகோ (எப்) ஆகிய 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இந்தியா உள்பட 8 அணிகள் முதல் சுற்றுடன் நடையை கட்டின.

இந்த நிலையில் 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட்) நேற்று தொடங்கியது. டெல்லி நேரு ஸ்டேடியத்தில் மாலை நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி-கொலம்பியா அணிகள் மோதின.

இதில் ஜெர்மனி அணியினரின் அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கொலம்பியா அணி திணறியது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி முதல் கோல் அடித்தது. அந்த அணியின் கேப்டன் ஜன் பிடே அர்ப் இந்த கோலை அடித்தார். 39-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி வீரர் யான் பிசெக் 2-வது கோலை அடித்தார். முதல் பாதியில் ஜெர்மனி அணி 2-0 என்ற கோல் கணக் கில் முன்னிலை வகித்தது.

பின் பாதியிலும் ஜெர்மனி அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. 49-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி வீரர் ஜான் யேபாக் கோல் அடித்தார். 65-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் கேப்டன் ஜன் பிடே அர்ப் மீண்டும் ஒரு கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப கொலம்பியா அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி முதல் அணியாக கால்இறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா அணி 5-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அமெரிக்க அணியில் டிம் வியாக் 19-வது, 53-வது, 77-வது நிமிடங்களில் கோல் அடித்தார். ஆன்ட்ரூ சார்லெடோன் 63-வது நிமிடத்திலும், ஜோஷ் சார்ஜென்ட் 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

கொல்கத்தாவில் 22-ந் தேதி நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, கொச்சியில் நாளை நடைபெறும் பிரேசில்-ஹோண்டுராஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும். கோவாவில் 21-ந் தேதி நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் அமெரிக்க அணி, இங்கிலாந்து-ஜப்பான் அணிகள் இடையிலான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் ஈரான்- மெக்சிகோ (மாலை 5 மணி, கோவா), பிரான்ஸ்-ஸ்பெயின் (மாலை 5 மணி, கவுகாத்தி), இங்கிலாந்து-ஜப்பான் (இரவு 8 மணி, கொல்கத்தா), மாலி- ஈராக் (இரவு 8 மணி, கோவா) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை சோனி டென்-2, சோனி டென்-3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story