ஜூனியர் உலக கோப்பை கால்பந்து ஸ்பெயின், பிரேசில் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து ஸ்பெயின், பிரேசில் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 22 Oct 2017 9:30 PM GMT (Updated: 22 Oct 2017 8:16 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டங்களில் ஸ்பெயின், பிரேசில் அணிகள் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறின.

கொச்சி,

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

இதில் கொச்சியில் நேற்று மாலை நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 3 முறை 2-வது இடம் பிடித்த ஸ்பெயின் அணி, ஈரானை எதிர்கொண்டது.

இந்த ஆட்டம் முழுவதும் ஸ்பெயின் அணியின் கையே ஓங்கி இருந்தது. பெரும்பாலும் பந்து ஸ்பெயின் அணி வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே வலம் வந்தது.

ஆட்ட நேரம் முடிவில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈரானை தோற்கடித்து 6-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. ஸ்பெயின் அணியில் கேப்டன் அபெல் ருய்ஸ் 13-வது நிமிடத்திலும், செர்ஜியோ கோமேஸ் 60-வது நிமிடத்திலும், பெர்ரான் டோரேஸ் 67-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஈரான் அணியில் சைத் கரிமி 69-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

ஈரான் அணி கோல் கீப்பர் அலி ஹோலம் ஜாடெக், ஸ்பெயின் அணியினரின் சில கோல் அடிக்கும் வாய்ப்புகளை அருமையாக தடுத்து நிறுத்தினார். இல்லையெனில் ஈரான் அணி இன்னும் அதிக கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நேரிட்டு இருக்கும். இந்த போட்டியை 29 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர்.

கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி அணி வீரர் ஜன் பியர்ட் அர்ப் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 21-வது நிமிடத்தில் கோல் அடித்தார். பிரேசில் அணி தரப்பில் மாற்று ஆட்டக்காரர் விவெர்சன் 71-வது நிமிடத்திலும், பாலின்ஹோ 77-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தை காண 66 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் குழுமி இருந்தனர்.

போட்டியில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். மும்பையில் 25-ந் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி, மாலியை எதிர்கொள்கிறது. முன்னதாக கவுகாத்தியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் பிரேசில் அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது.

Next Story