ஜூனியர் உலக கோப்பை கால்பந்தில் இங்கிலாந்து அணி ‘சாம்பியன்’ ஸ்பெயினை பந்தாடியது


ஜூனியர் உலக கோப்பை கால்பந்தில் இங்கிலாந்து அணி ‘சாம்பியன்’ ஸ்பெயினை பந்தாடியது
x
தினத்தந்தி 28 Oct 2017 9:30 PM GMT (Updated: 28 Oct 2017 8:49 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 5–2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை பந்தாடி முதல் முறையாக பட்டத்தை வென்றது.

கொல்கத்தா,

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 5–2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை பந்தாடி முதல் முறையாக பட்டத்தை வென்றது.

ஜூனியர் கால்பந்து

17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் (17 வயதுக்குட்பட்டோர்) கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின. ஜூனியர் உலக கோப்பையில் இரு ஐரோப்பிய அணிகள் மோதியது இதுவே முதல் நிகழ்வாகும்.

66,684 ரசிகர்களின் முன்னிலையில் இரு அணி வீரர்களும் துடிப்புடன் கோதாவில் இறங்கினர். 10 மற்றும் 31–வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் செர்ஜியோ கோம்ப்ஸ் கோல் அடித்து வியப்பூட்டினார். இதனால் ஸ்பெயின் 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆனால் மனரீதியாக வலுமிக்கவர்களாக காணப்பட்ட இங்கிலாந்து அணியினர் சரிவில் இருந்து சீக்கிரமாகவே மீண்டு வந்தனர். நட்சத்திர வீரர் பிரிஸ்டர் 44–வது நிமிடத்தில் கோல் அடித்தார். தொடர்ந்து இங்கிலாந்தின் கிப்ஸ் ஒயிட் (58–வது நிமிடம்), போடென் (69, 88–வது நிமிடம்), மார்க் குஹி (84–வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். இறுதிவரை முயற்சித்தும் அதன் பிறகு ஸ்பெயினால் மேற்கொண்டு ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை.

இங்கிலாந்து சாம்பியன்

முடிவில் இங்கிலாந்து அணி 5–2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மகுடம் சூடியது. 32 ஆண்டு கால ஜூனியர் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணி சாம்பியன் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். தோல்வியே சந்திக்காமல் கோப்பைக்கு முத்தமிட்ட இங்கிலாந்து அணி, இந்த கோப்பையை வென்ற 9–வது அணியாக பட்டியலில் இணைந்தது.

அதே சமயம் 1991, 2003, 2007–ம் ஆண்டுகளிலும் இறுதி ஆட்டம் வரை வந்து தோற்றிருந்த ஸ்பெயினுக்கு இந்த முறையும் சோகமே மிஞ்சியது. இதன் மூலம் கோப்பையையே வெல்லாமல் அதிக தடவை 2–வது இடத்தை பிடித்த அணியாக ஸ்பெயின் (4 முறை) திகழ்கிறது. நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்த இங்கிலாந்து வீரர் பிரிஸ்டர் (8 கோல்) தங்க ஷூவை தட்டிச்சென்றார்.

பிரேசில் 3–வது இடம்

முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, மாலியை சந்தித்தது. முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படாத நிலையில் பிற்பாதியில் 55–வது நிமிடத்தில் மாலி கோல் கீப்பர் யூசோப் கோய்ட்டாவின் அஜாக்கிரதையால் பிரேசில் அணிக்கு ஒரு கோல் கிடைத்தது. அதாவது பிரேசில் வீரர் ஆலன் கோல் நோக்கி மிதமான வேகத்தில் அடித்த பந்தை யூசோப் சர்வசாதாரணமாக பிடிக்க முயன்றார். அப்போது பந்து அவரது கையில் பட்டு நழுவி கோலுக்குள் உருண்டோடி விட்டது. 88–வது நிமிடத்தில் பிரேசிலின் மாற்று ஆட்டக்காரர் யுரி ஆல்பர்டடோ இன்னொரு கோல் போட்டார். பிரேசிலை விட மாலி அணியினரே இலக்கை நோக்கி துல்லியமாக பந்தை (10 ஷாட்) உதைத்தனர். ஆனால் பிரேசில் கோல் கீப்பர் கேப்ரியல் பிராஜாவ் அவர்களின் முயற்சிகளை முறியடித்தார்.

முடிவில் பிரேசில் 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3–வது இடத்திற்குரிய வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

--–

அதிக கோல்கள் அடிக்கப்பட்ட உலக கோப்பை

--–

உலக கோப்பை கால்பந்து போட்டி ஒன்றை இந்தியா நடத்தியது இதுவே முதல் முறையாகும். இந்த ஜூனியர் உலக கோப்பையில் 52 ஆட்டங்களில் 179 கோல்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் அதிக கோல்கள் பதிவான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடராக இது அமைந்தது. இதற்கு முன்பு 2013–ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரத்தில் நடந்த உலக கோப்பையில் 172 கோல்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக கோல் எண்ணிக்கையாக இருந்தது.

மேலும் இந்த உலக கோப்பையை 6 நகரங்களில் ஏறக்குறைய 13 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். அதிக ரசிகர்கள் கண்டுகளித்த உலக கோப்பை தொடரும் இது தான்.


Next Story