உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: சுவீடன் அணியிடம் இத்தாலி தோல்வி


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: சுவீடன் அணியிடம் இத்தாலி தோல்வி
x
தினத்தந்தி 11 Nov 2017 9:15 PM GMT (Updated: 11 Nov 2017 8:16 PM GMT)

உலக கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இத்தாலி அணி 0–1 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

சோல்னா,

உலக கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இத்தாலி அணி 0–1 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டம்

21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் அடுத்த ஆண்டு (2018) ஜூன் 14–ந் தேதி முதல் ஜூலை 15–ந் தேதி வரை நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் ரஷியா தவிர எஞ்சிய 31 அணிகளும் தகுதி சுற்று போட்டிகள் மூலமாக தகுதி பெறும்.

உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தகுதி சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டுவிட்டது. தற்போது ‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. உள்ளூர், வெளியூர் அடிப்படையிலான 2 ஆட்டங்களின் முடிவில் வெற்றி மற்றும் கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி உலக போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி தகுதி வாய்ப்பை இழக்கும்.

இத்தாலி அணி அதிர்ச்சி தோல்வி

இந்த நிலையில் சுவீடனில் உள்ள சோல்னா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐரோப்பிய கண்டத்துக்கான ‘பிளே–ஆப்’ சுற்று முதலாவது ஆட்டத்தில் இத்தாலி–சுவீடன் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதனை கோலாக மாற்ற முடியாமல் கோட்டை விட்டனர். 61–வது நிமிடத்தில் சுவீடன் அணி கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தது. மாற்று ஆட்டக்காரராக களம் கண்ட ஜாகோப் ஜோஹன்சன் இந்த கோலை அடித்தார். அவர் அடித்த முதல் சர்வதேச கோல் இதுவாகும். அதன் பிறகு இரு அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் 4 முறை சாம்பியனான இத்தாலி அணி 0–1 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

ஆட்டம் டிரா

இத்தாலி–சுவீடன் அணிகள் இடையிலான பிளே–ஆப் சுற்று 2–வது ஆட்டம் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் சுவீடன் அணி டிரா கண்டாலே உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று விடும். இத்தாலி அணி குறைந்தபட்சம் 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் தகுதி பெற முடியும்.

ஹோண்டுராஸ்சில் உள்ள சான் பெட்ரோ சுலா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘பிளே–ஆப்’ சுற்று முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–ஹோண்டுராஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணியினர் கோல் அடிக்க கிடைத்த பல நல்ல வாய்ப்புகளை வீணடித்தனர். இரு அணிகள் இடையிலான 2–வது ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் 15–ந் தேதி நடக்கிறது.

2–வது ஆட்டம்

நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் நேற்று நடந்த நியூசிலாந்து–பெரு அணிகள் இடையிலான ‘பிளே–ஆப்’ சுற்று முதலாவது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. பெரு அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தாலும், நியூசிலாந்து அணியின் பாதுகாப்பு ஆட்ட அரணை கடைசி வரை தகர்க்க முடியவில்லை. இரு அணிகள் இடையிலான 2–வது ஆட்டம் பெருவில் உள்ள லிமா நகரில் 15–ந் தேதி நடைபெறுகிறது.

போட்டியை நடத்தும் ரஷியா தவிர்த்து பிரேசில், ஈரான், ஜப்பான், மெக்சிகோ, பெல்ஜியம், தென்கொரியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நைஜீரியா, கோஸ்டாரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்லாந்து, செர்பியா, போர்ச்சுகல், பிரான்ஸ், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பனாமா, செனகல் ஆகிய 23 நாடுகள் தகுதி சுற்று மூலம் தகுதி கண்டுள்ளன.


Next Story