ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 18 Nov 2017 11:30 PM GMT (Updated: 18 Nov 2017 7:30 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை யில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி எப்.சி., புனே சிட்டி எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி., கோவா எப்.சி., பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணி, கோவா எப்.சி.யை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த ஆட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

2015-ம் ஆண்டு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி கடந்த ஆண்டு 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தலைமை பயிற்சியாளர் மெட்டராசி விடைபெற்றதால், சென்னை அணி புதிய பயிற்சியாளர் இங்கிலாந்தின் ஜான் கிரிகோரியின் மேற்பார்வையில் செயல்படுகிறது. கடந்த சீசனில், கடைசி கட்ட ஆட்டங்களில் நிறைய கோல்களை விட்டுக்கொடுத்ததால் இந்த சீசனில் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்று கிரிகோரி கூறியுள்ளார். மேலும் அவர் ‘எப்போதும் உள்ளூர் ஆட்டங்களில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பார்கள். சொந்த ஊரில் ஜெயித்து புள்ளிகளை எடுப்பதன் மூலம் பட்டம் வெல்லும் வாய்ப்பை பெறலாம்’ என்றும் குறிப்பிட்டார்.

ஜெஜெ லால்பெகுலா, ஜெர்ரி லால்ரின்ஜூலா, கேப்டன் ஹென்ரிக் செரனோ, மெயில்சன் ஆல்வ்ஸ் உள்ளிட்டோர் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களாக திகழ்கிறார்கள். வெற்றியுடன் தொடங்குவதை எதிர்நோக்கி உள்ள சென்னை அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும்.
இதுவரை...

கோவா எப்.சி.யும் லேசுப்பட்ட அணி அல்ல. அதனால் சென்னை அணிக்கு கடும் போட்டி காத்திருக்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்த 7 ஆட்டங்களில் 4-ல் சென்னையும், 3-ல் கோவாவும் வெற்றி பெற்றுள்ளன.

இரவு 8 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு- மும்பை அணிகள் மோதுகின்றன. போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், நேற்று முன்தினம் நடந்த கேரளா-கொல்கத்தா இடையிலான தொடக்க ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது. இந்த நிலையில் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய ஜாம்ஷெட்பூர் எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதிய ஆட்டமும் கோல் இன்றி டிராவில் முடிந்தது. இந்த சீசனில் முதல் இரு ஆட்டங்களில் ஒரு கோல் கூட அடிக்கப்படாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Next Story