ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி ‘திரில்’ வெற்றி 3–2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தியது


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி ‘திரில்’ வெற்றி 3–2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தியது
x
தினத்தந்தி 7 Dec 2017 9:30 PM GMT (Updated: 7 Dec 2017 7:35 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 3–2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி 3–வது வெற்றியை ருசித்தது.

சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 3–2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி 3–வது வெற்றியை ருசித்தது.

ஐ.எஸ்.எல். கால்பந்து

4–வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 18–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன் மல்லுகட்டியது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த சென்னை அணி, முதல் பாதியில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதே போல் கொல்கத்தா அணி பல ஷாட்டுகளை அடித்த போதிலும் சென்னை அணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. இதனால் முதல் 45 நிமிடங்களில் கோல் தரிசனத்தை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.

லால்பெகுலா கலக்கல்

ஆனால் இரண்டாவது பாதியில் கோல் அடிக்கும் வேட்கையை இரு அணியினரும் தீவிரப்படுத்தியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 65–வது நிமிடத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா தலையால் முட்டி கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். 77–வது நிமிடத்தில் கொல்கத்தாவின் ஜிகியூனா கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து 84–வது நிமிடத்தில் இனிகோ கால்ட்ரோனும் (சென்னை வீரர்), 89–வது நிமிடத்தில் நிஜாஸி குகியும் (கொல்கத்தா வீரர்) கோல் போட ஆட்டத்தில் அனல் பறந்தது.

போட்டி டிராவில் முடியுமோ என்று எதிர்பார்த்த வேளையில், கடைசி நிமிடத்தில் (90–வது நிமிடம்) சென்னை வீரர் ஜெஜொ லால்பெகுலா மீண்டும் கோல் போட்டு ஹீரோவாக ஜொலித்தார். முதலில் இனிகோ கால்ட்ரோன் அடித்த ஷாட்டை கொல்கத்தா கோல் கீப்பர் தேப்ஜித் முஜூம்தர் தடுத்து விட்டார். அப்போது திரும்பி வந்த பந்தை அங்கு நின்ற ஜெஜெ லால்பெகுலா சாதுர்யமாக வலைக்குள் அனுப்பி வெற்றியை உறுதிப்படுத்தினார். 5 கோல்களும் கடைசி 25 நிமிடத்திற்குள் விழுந்தது கவனிக்கத்தக்கது.

சென்னை அணி 3–வது வெற்றி

திரிலிங்கான ஆட்டத்தின் நிறைவில் சென்னை அணி 3–2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தியது. தொடக்க ஆட்டத்தில் கோவாவிடம் தோற்ற சென்னை அணி, அதன் பிறகு கவுகாத்தி, புனே ஆகிய அணிகளை துவம்சம் செய்தது. இப்போது கொல்கத்தாவையும் வீழ்த்தி 3–வது வெற்றியை (ஹாட்ரிக்) பதிவு செய்திருக்கிறது. அத்துடன் 9 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலிலும் சென்னை அணி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அதே சமயம் கொல்கத்தா அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. 4–வது லீக்கில் ஆடிய அந்த அணி 2 டிரா, 2 தோல்வி என்று 2 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)– பெங்களூரு எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.


Next Story