உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 5–வது முறையாக பெற்றார், ரொனால்டோ


உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 5–வது முறையாக பெற்றார், ரொனால்டோ
x
தினத்தந்தி 8 Dec 2017 10:00 PM GMT (Updated: 8 Dec 2017 9:28 PM GMT)

உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை போர்ச்சுகலின் ரொனால்டோ 5–வது முறையாக பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்.

பாரீஸ்,

உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை போர்ச்சுகலின் ரொனால்டோ 5–வது முறையாக பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்.

ரொனால்டோவுக்கு விருது

ஆண்டுதோறும் பிரான்ஸ் கால்பந்து அமைப்பு சார்பில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘பாலோன் டி ஆர்’ என்ற தங்கப்பந்து விருது 1956–ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 173 பத்திரிகையாளர்கள் ஓட்டுபோட்டு விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விருது பட்டியலில் மொத்தம் 30 பிரபல கால்பந்து நட்சத்திரங்கள் இடம் பெற்றிருந்தனர். பத்திரிகையாளர் வாக்கெடுப்பு அடிப்படையில் போர்ச்சுகல் அணியின் கேப்டனும், ரியல் மாட்ரிட் கிளப் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த முறையும் பாலோன் டி ஆர் விருதை தட்டிச்சென்றார். 2–வது இடம் லயோனல் மெஸ்சிக்கும் (அர்ஜென்டினா) 3–வது இடம் நெய்மாருக்கும் (பிரேசில்)கிடைத்தது.

மெஸ்சியின் சாதனை சமன்

கவுரவமிக்க இந்த விருதை ரொனால்டோ பெறுவது இது 5–வது முறையாகும். ஏற்கனவே 2008, 2013, 2014, 2016 ஆகிய ஆண்டுகளிலும் இந்த விருதை ரொனால்டோ பெற்றிருந்தார். இதன் மூலம் இந்த விருதை அதிக முறை வசப்படுத்திய சாதனையாளரான பார்சிலோனா கிளப்புக்காக ஆடும் லயோனல் மெஸ்சியின் (இவரும் 5 முறை) சாதனையை ரொனால்டோ சமன் செய்தார்.

கடந்த சீசனில் கிளப் போட்டிகளில் அவர் 42 கோல்கள் அடித்திருந்தார். இதில் ரியல் மாட்ரிட கிளப் அணி சாம்பியன்ஸ் லீக், லா லிகா ஆகிய மகுடங்களை சூடுவதற்கும், போர்ச்சுகல் அணி ஐரோப்பிய கோப்பையை (யூரோ) வெல்வதற்கும் அவரது ஆட்டம் பக்கபலமாக இருந்தது. இது தான் அவருக்கு இந்த விருதை பெற்றுத்தந்து இருக்கிறது.

பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் டவரில் வெகுவிமரிசையாக நடந்த விழாவில் விருதை பெற்றுக்கொண்ட 32 வயதான ரொனால்டோ நிருபர்களிடம் கூறுகையில், ‘மறுபடியும் இந்த விருதை கையில் ஏந்தியதை என்னால் நம்பவே முடியவில்லை. எனது இன்னொரு கனவு நனவாகி இருக்கிறது. எனது வாழ்க்கையில் இது மறக்க முடியாத மிகப்பெரிய தருணமாகும். இதற்காக ரியல்மாட்ரிட் அணியின் சக வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும், நான் இந்த நிலைமைக்கு வர உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

போட்டி தொடரும்

விருது போட்டியில் பிரதான எதிராளியாக மெஸ்சி இருப்பது குறித்து கேட்கிறீர்கள். இன்னும் சில ஆண்டுகள் எனது உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். விருதை பெறுவதில் எனக்கும், மெஸ்சிக்கும் இடையிலான போட்டி தொடரும்’ என்றார்.

கிறிஸ்துமஸ் பரிசாக பெற விரும்புவது என்ன? என்று கேட்ட போது, இன்னொரு குழந்தை வேண்டும் என்று கூறி விட்டு, சும்மா... ஜோக்குக்காக சொல்கிறேன் என்றார். 7 குழந்தைகள், 7 தங்கப்பந்து விருது தனக்கு வேண்டும் என்று அவர் கூறிய போது, அனைவரும் சிரித்து விட்டனர். ரொனால்டோ 4 குழந்தைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story