ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணி 4-வது வெற்றி கோவாவுக்கு அதிர்ச்சி அளித்தது


ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணி 4-வது வெற்றி கோவாவுக்கு அதிர்ச்சி அளித்தது
x
தினத்தந்தி 23 Dec 2017 9:00 PM GMT (Updated: 23 Dec 2017 8:34 PM GMT)

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவாவும், எப்.சி. புனே சிட்டியும் மோதின.

கோவா,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவாவும், எப்.சி. புனே சிட்டியும் மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அடியெடுத்து வைத்த கோவா அணியே தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு முதல் பாதியில் பலன் இல்லை.

இதே உத்வேகத்துடன் பிற்பாதியிலும் விளையாடினர். 72-வது நிமிடத்தில் புனே வீரர் எலிமியானோ அல்பாரோ தனியாளாக சென்று அருமையாக கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்த நிமிடத்தில் அல்பாரோ மீண்டும் ஒரு கோல் அடித்திருக்க வேண்டியது. அந்த வாய்ப்பு நூலிழையில் நழுவிப்போனது.

பதிலடி கொடுக்க கோவா அணியினர் தீவிரம் காட்டிய நிலையில் 84-வது நிமிடத்தில் புனே அணி இன்னொரு அசத்தல் கோல் போட்டது. இந்த கோலை ஜோனதன் லூகா அடித்தார். முடிவில் புனே அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது. தொடர்ச்சியாக 3 வெற்றிகளுக்கு பிறகு கோவா சந்தித்த முதல் தோல்வியாகும். மொத்தத்தில் 6 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் கோவா அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.அதே சமயம் 7-வது ஆட்டத்தில் விளையாடிய புனே அணிக்கு இது 4-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வென்றது.

போட்டியில் அடுத்த 4 நாட்கள் ஓய்வாகும். அடுத்த ஆட்டம் ஜாம்ஷெட்பூர்-சென்னையின் எப்.சி. அணிகள் இடையே 28-ந்தேதி நடக்கிறது.

Next Story