ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 5-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 5-வது வெற்றி
x
தினத்தந்தி 29 Dec 2017 12:00 AM GMT (Updated: 28 Dec 2017 7:34 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை தோற்கடித்து 5-வது வெற்றியை பதிவு செய்தது.

ஜாம்ஷெட்பூர்,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் ஜாம்ஷெட்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 33-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யும், முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யும் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். தொடக்கத்தில் ஜாம்ஷெட்பூரின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. அவர்களின் இரு கோல் வாய்ப்புகளை சென்னை கோல் கீப்பர் கரன்ஜித்சிங் முறியடித்தார்.

41-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா கோலாக்கினார்.

அடுத்த 4-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் பிகாஷ் ஜெய்ருவை சென்னை அணி கேப்டன் செரனோ கீழே தள்ளியதாக ஜாம்ஷெட்பூருக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பிகாஷ் ஜெய்ருவுக்கு மிக நெருக்கமாக ஓடினேனே தவிர, அவரை தள்ளிவிடவில்லை என்று செரனோ வாதிட்ட போதிலும் நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சில வினாடிகள் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு தங்களுக்குரிய பெனால்டி வாய்ப்பை ஜாம்ஷெட்பூர் வீரர் பெல்போர்ட் உதைத்தார். சென்னை கோல் கீப்பர் கரன்ஜித்சிங் அற்புதமாக ‘டைவ்’ அடித்து பந்தை தடுத்து பிரமிக்க வைத்தார். பெனால்டி வாய்ப்பு வீண் ஆனதால், குழுமியிருந்த 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

பிற்பாதியில் இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தும் பலன் இல்லை. பந்து சென்னை வீரர்கள் பக்கமே அதிகமாக (55 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. மேலும், அவ்வப்போது முரட்டு ஆட்டமும் தலைதூக்கியது. இரு அணி தரப்பிலும் சேர்த்து 6 வீரர்கள் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்குள்ளானார்கள்.

முடிவில் சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிக்கனியை பறித்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 5-வது வெற்றியாகும். மேலும் ஒரு டிரா, 2 தோல்வியும் கண்டுள்ள சென்னை அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 7-வது லீக்கில் ஆடிய ஜாம்ஷெட்பூருக்கு இது 2-வது தோல்வியாகும்.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதுகின்றன.

Next Story