சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பித்தது, டெல்லி


சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பித்தது, டெல்லி
x
தினத்தந்தி 7 Jan 2018 10:00 PM GMT (Updated: 7 Jan 2018 8:22 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.க்கு எதிரான ஆடடத்தில் டெல்லி அணி கடைசி நிமிடத்தில் கோல் அடித்து தோல்வியில் இருந்து தப்பியது.

சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.க்கு எதிரான ஆடடத்தில் டெல்லி அணி கடைசி நிமிடத்தில் கோல் அடித்து தோல்வியில் இருந்து தப்பியது.

ஐ.எஸ்.எல். கால்பந்து

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 41–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, டெல்லி டைனமோசுடன் மோதியது. இரு அணியினரும் தாக்குதல் பாணியை கையாண்டதால் தொடக்கத்தில் இருந்தே ஆட்டம் விறுவிறுப்புக்குள்ளானது.

பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட்டுகள் அடிப்பதிலும் முதல் பாதியில் டெல்லி அணியின் கையே சற்று ஓங்கி இருந்தது. இரண்டு முறை நெருங்கி வந்து கோட்டை விட்ட டெல்லி அணியினர் 24–வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். அதாவது இடது பக்கத்தில் இருந்து நந்தகுமார் சேகர் அடித்த பந்தை, டெல்லி வீரர் டேவிட் நிகாய்த் பாய்ந்து தலையால் முட்டி பந்தை வலைக்குள் தள்ளினார். இதற்கு 42–வது நிமிடத்தில் சென்னை அணி பதிலடி கொடுத்தது. ‘பிரிகிக்’ வாய்ப்பில் ரெனே மிஹெலிக் உதைத்த பந்தை சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா தலையால் முட்டி அருமையாக கோலாக்கினார். 44–வது நிமிடத்தில் டெல்லியின் ரோமியோ பெர்னாண்டஸ் கோல் நோக்கி அடித்த பந்தை சென்னை கோல் கீப்பர் கரண்ஜித்சிங் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து முதல் பாதி 1–1 என்ற கணக்கில் சமநிலை நிலவியது.

டிரா ஆனது

பிற்பாதியில் இரு தரப்பினரும் மேலும் ஆக்ரோ‌ஷமாக விளையாடினர். 51–வது நிமிடத்தில் சக வீரர் ஜெர்மன்பிரீத்சிங் தட்டிக்கொடுத்த பந்தை ஜெஜெ லால்பெகுலா, கோல் கம்பத்தில் வலது கார்னரின் மேல் பகுதிக்குள் லாவகமாக அடித்து கோலாக்கினார். இதனால் சென்னை அணி 2–1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இந்த முன்னிலையை தக்க வைத்துக் கொள்ள சென்னை வீரர்கள் தவறி விட்டனர்.

கடைசி நிமிடத்தில் டெல்லி அணியின் கலூ உச்சே கடத்தி கொடுத்த பந்தை மாற்று ஆட்டக்காரர் குயோன் பெர்னாண்டஸ் கோல் அடித்து, குழுமியிருந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்தை சிதைத்தார். முடிவில் இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

சென்னை அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி என்று 17 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. டெல்லி அணி 4 புள்ளியுடன் (ஒரு வெற்றி, ஒரு டிரா, 8 தோல்வி) கடைசி இடத்திலேயே தொடருகிறது.

பிறந்த நாள் நாயகன்

ஆட்டநாயனாக தேர்வு செய்யப்பட்ட மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஜெஜெ லால்பெகுலா நேற்று தனது 27–வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சீசனில் இதுவரை 6 கோல்கள் அடித்து அட்டகாசப்படுத்தியுள்ள ஜெஜெ லால்பெகுலா ஒட்டுமொத்தத்தில் சென்னை அணிக்காக அதிக கோல் அடித்தவர் (19 கோல்) என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

போட்டியில் அடுத்த இரு நாட்கள் ஓய்வாகும். 10–ந்தேதி நடக்கும் லீக் ஆட்டத்தில் டெல்லி– கேரளா அணிகள் சந்திக்கின்றன.


Next Story