ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-புனே அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-புனே அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 12 Jan 2018 10:00 PM GMT (Updated: 12 Jan 2018 9:01 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் போட்டியில் சென்னையின் எப்.சி.- எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

சென்னை,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. புனே அணி 9 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது.

இரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 5 முறை வெற்றி கண்டுள்ளது. 2 ஆட்டம் டிராவில் முடிந்தது. ஒரு ஆட்டத்தில் கூட புனே வெற்றி கண்டதில்லை. இந்த சீசனில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் புனே அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதும் இதில் அடங்கும்.

6-வது வெற்றியை ருசிப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க இரு அணிகளும் முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. புனே அணியின் பயிற்சியாளர் ரான்கோ போபோவிச் நடுவரின் முடிவை விமர்சித்ததால் 4 போட்டிகளில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதிக கோல் அடித்து இருக்கும் அந்த அணியின் கேப்டன் மார்செலின்ஹோ 4 முறை மஞ்சள் அட்டை பெற்றதால் இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாதது புனே அணிக்கு பின்னடைவாகும்.

இதேபோல் சென்னை அணியின் பயிற்சியாளர் கிரிகோரி 3 போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் அணியினருடன் இணைந்து செயல்பட முடியாது. ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்ட கேப்டன் ஹென்ரிக் செரேனோ அணிக்கு திரும்புவது சென்னை அணிக்கு வலுசேர்க்கும். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

சென்னை அணி உள்ளூரில் நடந்த தனது முந்தைய 2 ஆட்டங்களில் கடைசி கட்டத்தில் கோல் வாங்கி வெற்றி வாய்ப்பை நழுவவிட்டு டிரா கண்டது. அந்த தவறை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. இந்த போட்டி குறித்து சென்னை அணியின் உதவி பயிற்சியாளர் சையது சபீர் பாஷா அளித்த பேட்டியில், ‘புனே அணி தாக்குதல் ஆட்டத்தில் வலுவானது என்பதை நாங்கள் அறிவோம். இது எங்களுக்கு கடினமான சவாலாக இருக்கும். சிறந்த கேப்டனான ஹென்ரிக் செரேனோ எங்கள் பின்னால் இருப்பது அதிர்ஷ்டமாகும். இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும். உள்ளூரில் நடந்த 2 போட்டிகளில் கடைசி கட்டத்தில் கோல் வாங்கி டிரா கண்டது எங்களை வேதனைப்படுத்தியது. கவனக்குறைவு காரணமாக இது நடந்தது. கடைசி தருணங்களில் நாம் ஒரு அணியாக விளையாட வேண்டும். அதனை வீரர்களும் புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன். வரும் ஆட்டங்களில் இதுபோன்ற தவறு நடக்காது’ என்று தெரிவித்தார்.

Next Story