மாநில ஆக்கி போட்டி வருமான வரி அணி அரை இறுதிக்கு தகுதி


மாநில ஆக்கி போட்டி வருமான வரி அணி அரை இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 16 Feb 2017 8:40 PM GMT (Updated: 16 Feb 2017 8:40 PM GMT)

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2–வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2–வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். அணியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்தியன் வங்கி அணி தரப்பில் பிலிப் மார்ட்டின், திருமாவளவன் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் சென்னை பல்கலைக்கழக அணி 4–2 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. சென்னை பல்கலைக்கழக அணியில் ரகுராம் 2 கோலும், வினோதன், வீரதமிழன் தலா ஒரு கோலும் அடித்தனர். தெற்கு ரெயில்வே அணி தரப்பில் பிரவீன்குமார், கவுதம் தலா ஒரு கோல் திருப்பினார்கள். இன்னொரு கால்இறுதி ஆட்டத்தில் வருமான வரி அணி 3–2 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. வருமான வரி அணியில் பிரதாப், ஞானவேல், நிசாந்த் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியன் ஓவர்சீஸ் அணி தரப்பில் ரபீக், பிட்டப்பா தலா ஒரு கோல் திருப்பினார்கள். மற்றொரு கால்இறுதியில் மத்திய கலால் வரி அணி 3–1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. மத்திய கலால் வரி அணியில் ஹசன் பாஷா 2 கோலும், செல்வகுமார் ஒரு கோலும் அடித்தனர். தமிழ்நாடு போலீஸ் அணி தரப்பில் கந்தா குரு ஒரு கோல் திருப்பினார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதிப்போட்டிகளில் இந்தியன் வங்கி–மத்திய கலால் வரி (பிற்பகல் 2 மணி), சென்னை பல்கலைக்கழகம்–வருமான வரி (பிற்பகல் 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story