12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் 11–ந் தேதி தொடக்கம்


12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் 11–ந் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 7 March 2017 10:30 PM GMT (Updated: 7 March 2017 7:28 PM GMT)

12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி சென்னையில் வருகிற 11–ந் தேதி தொடங்குகிறது.

சென்னை,

மாநில ஆக்கி போட்டி

இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் மாநில அளவிலான அழைப்பு ஆண்கள் ஆக்கி போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் வருகிற 11–ந் தேதி முதல் 16–ந் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

இதில் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., வருமான வரி, கலால் வரி, தமிழ்நாடு போலீஸ், சென்னை மாநகர போலீஸ், சாய், ஆக்கி அகாடமி (வாடிப்பட்டி), ஏ.ஜி.அலுவலகம், லயோலா கல்லூரி ஆகிய 12 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

ரூ.1 லட்சம் பரிசு

‘நாக்–அவுட்’ முறையில் நடத்தப்படும் இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.1 லட்சமாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசு கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 2–வது இடம் பெறும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், 3–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறந்த வீரர் விருதும், தொடர்நாயகன் விருதும் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் இந்தியன் வங்கியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யும் திட்டம் நிர்வாகத்தின் பரிசீலனையில் உள்ளது.

மேற்கண்ட தகவலை இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்ற தலைவர் ஆர்.மணிமாறன், செயலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் தெரிவித்தனர்.

கோப்பை அறிமுகம்

முன்னதாக மாநில ஆக்கி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசு கோப்பையின் அறிமுக விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் கார்ப்பரேட் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மகேஷ்குமார் ஜெயின் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். செயல் இயக்குனர்கள் ஏ.எஸ்.ராஜீவ், எம்.கே.பட்டாச்சார்யா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story