மாநில ஆக்கி போட்டி தொடக்க ஆட்டத்தில் சென்னை போலீஸ் அணி வெற்றி


மாநில ஆக்கி போட்டி தொடக்க ஆட்டத்தில் சென்னை போலீஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 11 March 2017 11:00 PM GMT (Updated: 11 March 2017 7:32 PM GMT)

இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் மாநில அளவிலான அழைப்பு ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

சென்னை,

இந்தியன் வங்கியின் பொதுமேலாளர் ஆர்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்ற தலைவர் ஆர்.மணிமாறன், செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். 16–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை மாநகர போலீஸ் அணி 4–3 என்ற கோல் கணக்கில் வாடிப்பட்டி ராஜா ஆக்கி அகாடமி அணியை தோற்கடித்தது. வருமானவரி–லயோலா அணிகள் மோதிய ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தன. வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ஷூட்–அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததால் மீண்டும் சமநிலை நீடித்தது. இதனால் சடன்டெத் முறை கையாளப்பட்டது. இதன் முடிவில் லயோலா அணி 6–4 என்ற கோல் கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தியது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் சாய்–ஏ.ஜி.அலுவலகம் (பிற்பகல் 2 மணி), ஐ.சி.எப்.–தமிழ்நாடு சிறப்பு போலீஸ் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story