மாநில ஆக்கி போட்டி: இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி–ஐ.ஓ.பி.


மாநில ஆக்கி போட்டி: இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி–ஐ.ஓ.பி.
x

மாநில ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி–ஐ.ஓ.பி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை,

இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

5–வது நாளான நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.)–மத்திய கலால் வரி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலை வகித்தன. ஐ.ஓ.பி. அணி சார்பில் ரபீல் 3–வது நிமிடத்திலும், எஸ்.எம்.ரபீக் 46–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மத்திய கலால் வரி அணி தரப்பில் வீரன்னா 49–வது மற்றும் 70–வது நிமிடங்களில் பதில் கோல் திருப்பினார்.

பெனால்டி ஷூட்டில் ஐ.ஓ.பி. வெற்றி

2–2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்–அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஐ.ஓ.பி. அணி 2–1 என்ற கோல் கணக்கில் மத்திய கலால் வரி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். அணியை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியன் வங்கி தரப்பில் ஞானவேல் 3–வது நிமிடத்திலும், தமிழரசன் 22–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இன்று இறுதிப்போட்டி

இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி–ஐ.ஓ.பி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக நடைபெறும் 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் மத்திய கலால் வரி–ஐ.சி.எப். அணிகள் மோதுகின்றன.


Next Story