மாநில ஆக்கி போட்டி: இந்தியன் வங்கி அணி ‘சாம்பியன்’


மாநில ஆக்கி போட்டி: இந்தியன் வங்கி அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 16 March 2017 9:02 PM GMT (Updated: 16 March 2017 9:01 PM GMT)

இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை,

இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்தது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று காலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி–இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 3–2 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.பி. அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியன் வங்கி சார்பில் சுரேந்தர் 10–வது நிமிடத்திலும், ஞானவேல் 17–வது மற்றும் 62–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஐ.ஓ.பி. அணி தரப்பில் முத்துசெல்வன், ஹர்மன்பிரீத்சிங் ஆகியோர் 44–வது நிமிடத்தில் அடுத்தடுத்து பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் திருப்பினார்கள். தோல்வி கண்ட ஐ.ஓ.பி.அணி 2–வது இடம் பெற்றது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி 2–1 என்ற கோல் கணக்கில் மத்திய கலால் வரி அணியை சாய்த்து 3–வது இடத்தை தனதாக்கியது. ஐ.சி.எப். அணியில் அய்யப்பன் 39–வது மற்றும் 63–வது நிமிடங்களில் கோல் அடித்தார். மத்திய கலால் வரி அணி தரப்பில் ஜான் 11–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் மகேஷ்குமார் ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2–வது இடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரமும், 3–வது இடம் பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரமும் ரொக்கப்பரிசாக அளிக்கப்பட்டது. இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்ற தலைவர் ஆர்.மணிமாறன், செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story